Asianet News TamilAsianet News Tamil

மராத்தா இட ஒதுக்கீடு: இளைஞர் தற்கொலை!

மராத்தா இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Youth ends life in maharashtra over Maratha reservation issue smp
Author
First Published Nov 14, 2023, 3:22 PM IST | Last Updated Nov 14, 2023, 3:22 PM IST

மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் அச்சமூகத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் பெயர் தாஜிபா ராம்தாஸ் கடம் என்பதும், மகாராஷ்டிராவின் மர்லாக் கிராமத்தை சேர்ந்தவர் அவர் என்பதும் தெரியவந்துள்ளது. வேலைக்காக நான்டெட் நகருக்கு வந்த அவர், ஜெண்டா சவுக் பகுதியில் விஷம் அருந்தி கடந்த 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாஜிபா மயங்கி கிடந்ததை கண்டு அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அடுத்த நாளான 12ஆம் தேதி உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பாக்கெட்டில் இருந்து எடுக்கப்பட்ட தற்கொலை குறிப்பில், இது எனது அரசு வேலை பற்றிய கேள்வி என குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இளைஞரின் தற்கொலை பாக்யநகர் காவல் நிலையத்தில் எதிர்பாரா மரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவின் கீழ், அரசு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிர மக்கள் தொகையில் 30 சதவீதம் இருக்கும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கூர்நோக்கு இல்லங்கள் மேம்பாடு: முதல்வரிடம் ஒரு நபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

போராட்டத்தினுடைய இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக ஜல்னா மாவட்டத்தில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மராட்டிய இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே ஈடுபட்டார். இதனால், அம்மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. அவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை, அரசாங்கம் அளித்த இட ஒதுக்கீடு உறுதி ஆகியவற்றால் அம்மாநிலத்தில் இயல்பு நிலை நிலவி வருகிறது.

அதேசமயம், டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு புதிய காலக்கெடுவை மனோஜ் ஜராங்கே வழங்கியுள்ளார். மேலும், இடஒதுக்கீடுக்காக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அமைதியான முறையில் போராட வேண்டும் என்று மராட்டிய இளைஞர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தாலோ அல்லது அந்த எண்ணத்தில் இருக்கும் நண்பர்களைப் பற்றி கவலைப்பட்டாலோ அல்லது உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவைப்பட்டாலோ, சினேகா அறக்கட்டளையை 044-24640050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் கவலைகளுக்கு செவி சாய்க்க பலரும் இருக்கின்றனர். உங்களது உயிர் அளப்பரிய சொத்து. அதனை தயவு செய்து மாய்த்துக் கொள்ளாதீர்கள். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கண்டிப்பாக கூடாது. எந்த வித பிரச்சினைக்கும் அது தீர்வல்ல.)

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios