உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்திருக்கும் நிலையில் 111 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கேரள மாணவி ஒருவருக்கு தனிமை சிகிச்சையில் இருந்த நாட்களில் கொரோனா அறிகுறி இல்லாமல் 19 நாட்களுக்கு பிறகு பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாணவி மார்ச் மாதம் 15ஆம் தேதி கேரளாவின் பத்தனம்திட்டா வில் இருந்து எர்ணாகுளம் சென்றிருக்கிறார் அங்கிருந்து ரயில் மூலமாக டெல்லி சென்ற அந்த மாணவி பின்னர் மார்ச் 17ஆம் தேதி மீண்டும் எர்ணாகுளம் திரும்பியிருக்கிறார். டெல்லி சென்று திரும்பியதால் அந்த மாணவியை தனிமை சிகிச்சையில் வைத்து சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்தனர்.

தனிமை சிகிச்சையில் இருந்த வரையில் அந்த மாணவிக்கு கொரோனா குறித்த அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தது. இதை அடுத்து அவரது ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 19 நாட்கள் தனிமை சிகிச்சையில் அறிகுறி இல்லாமல் இருந்த அந்த மாணவிக்கு பரிசோதனைகளின் முடிவில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து கூறியிருக்கும் மருத்துவர்கள் 14 நாட்கள் கொரோனா அறிகுறி இல்லாமல் ஒரு நபர் தனிமை சிகிச்சையில் இருந்தால் அவருக்கு பாதிப்பு இல்லை என கருதப்படும் நிலையில் 19 நாட்கள் அறிகுறி எதுவும் இல்லாமல் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி ஆகியிருப்பது வியப்பையும் கொடிய கொரோனா வைரஸ் நோயின் வீரியத்தையும் உணர்த்துவதாக தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அந்த மாணவி பயணித்த ரயில் மற்றும் பேருந்து தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு அதில் பயணம் செய்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.