சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள ஒரு கடையில் லேகியம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்ட அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீப் இன்று உயிரிழந்தார்.

நண்பரை தாக்கிவிட்டு மருத்துவ மாணவி கற்பழிக்க முயற்சி!

கேரள மாநிலம் பாலக்காடு சித்தூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வருபவர் பிரஜித். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் திருவரம்பு.
நேற்று முன்தினம் பிரஜித் தன்னுடன் படிக்கும் தோழி ஒருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பொள்ளாச்சி அருகே உள்ள மீன்கரை அணைக்கு வந்தார்.

இரவு 9 மணியளவில் அங்கு இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் வேடம் அணிந்த 3 வாலிபர்கள் மருத்துவ மாணவர் பிரஜித்தை தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்தனர். பின்னர் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர். சுதாரித்துக்கொண்ட அவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.

மருத்துவ மாணவ- மாணவியை விரட்டி வந்த கும்பலை வீட்டில் இருந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விரட்டி விட்டனர். இதுகுறித்து பிரஜித் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். பின்னர் இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து தென்மண்டல ஐ.ஜி. அஜித்குமாருக்கு தகவல் கிடைத்ததும் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுத்து 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று பாலக்காடு டி.ஒய்.எஸ்.பி. விஜயகுமாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் வாலிபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் இதுபோன்று வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

வாலிபரை 20 முறை கத்தியால் குத்திய இளம் பெண்.

டெல்லி புறநகர் நிவாஸ் விகார் பகுதியை சேர்ந்த பெண் கமல்தீப். இவர் ஆன்லைன் கடை மூலமாக செல்போன் ஒன்றை வாங்கினார். அந்த செல்போன் பார்சலை கடை ஊழியர் கேசவ் தாமதமாக கொண்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கமல்தீப்பும், அவரது சகோதரர் ஜிதேந்தர் சிங்கும் பார்சல் கொண்டு வந்த அந்த வாலிபரை கத்தியால் சரமாரியாக குத்தினர். 20-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றனர். கத்தி குத்தில் காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.