கேரள மாநிலம் கொச்சி அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரின் நாக்கை கடித்து துண்டாக்கிய இளம் பெண் அதே நாக்குடன் சென்று போலீசில் புகார் செய்த சம்பவம் நடந்துள்ளது.

கொச்சியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த திங்கிள்கிழமை வீட்டில் தனியாக் இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க  இளைஞர் ஒருவர் அந்த பெண் வசித்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண்ணை இளைஞர் முத்தம் கொடுத்தபோது, அவரின் நாக்கை அந்த பெண் கடித்து துண்டாக்கினார்.

நாக்கு பறிபோன வேதனையில் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, 2 சென்டிமீட்டர் நாக்குடன், அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் துணிச்சலுடன் அந்த இளைஞர் மீது புகார் செய்தார். அந்த இளைஞர் மீது இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 477, 354, 367 ஆகிய பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், கொச்சியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அந்த இளைஞர் சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அங்கு சென்றபோது, விபத்தில் நாக்கு துண்டாகிவிட்டது எனக் கூறி சிகிச்சை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் பெயர் ராகேஷ் எனத் தெரியவந்தது.  இதையடுத்து, அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.