டெல்லி பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளரிடம் ஒரு மாதத்திற்குள் இந்தி கற்காவிட்டால் பூங்காவை விட்டு வெளியேற்றுவதாக மிரட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி கண்டனங்கள் எழுந்துள்ளன.
டெல்லியில் ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை, "ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் வெளியேற வேண்டும்" என பாஜக பெண் கவுன்சிலர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பட்பர்கஞ்ச் (Patparganj) பகுதியின் 197-வது வார்டு பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி. இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்றபோது, அங்கு உள்ளூர் குழந்தைகளுக்குக் கால்பந்து பயிற்சி அளித்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்கப் பயிற்சியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ரேணு சவுத்ரி மிரட்டல்
கவுன்சிலர் ரேணு சவுத்ரி அந்தப் பயிற்சியாளரிடம், "நீ ஏன் இன்னும் இந்தி கற்றுக்கொள்ளவில்லை? நான் சொல்வதை நீ சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த ஒரு மாதத்திற்குள் நீ இந்தி கற்கவில்லை என்றால், இந்த பூங்காவை விட்டு உன்னை வெளியேற்றச் சொல்வேன்." என்று ஆக்ரோஷமாக மிரட்டல் விடுத்தார்.
"இங்கு வந்து பணம் சம்பாதிக்கிறாய் என்றால், இந்தியிலும் பேசக் கற்றுக்கொள். இது ஒன்னும் சிரிப்புக்குரிய விஷயம் அல்ல, நான் மிகவும் சீரியஸாகச் சொல்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
வைரல் வீடியோ
மேலும், பூங்கா காவலாளியிடம், "இரவு 8 மணிக்குள் பூங்காவை மூட வேண்டும். மீறி ஏதேனும் குற்றம் நடந்தால் நீதான் பொறுப்பு" என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கவுன்சிலரின் நடத்தைக்கு எதிர்க்கட்சியினரும், சமூக வலைதளவாசிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "ஒரு மக்கள் பிரதிநிதி இப்படி இனவெறித் தூண்டல் மற்றும் மொழித் திணிப்பில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது" எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
“யாரையும் மிரட்டவில்லை”
சர்ச்சை வெடித்ததையடுத்து அவர் அளித்த விளக்கத்தில், "அந்தப் பூங்காவில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாகப் புகார்கள் வந்ததால்தான் நான் அங்கு சென்றேன். அங்குள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இந்த ஆப்பிரிக்கப் பயிற்சியாளர் இங்கு 15 ஆண்டுகளாக இருக்கிறார். அவருக்கு அடிப்படை இந்தி கூட தெரியாததால் தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. நான் யாரையும் மிரட்டவில்லை, தகவல் தொடர்பை எளிதாக்கவே இந்தி கற்கச் சொன்னேன்" என்று தெரிவித்துள்ளார்.


