மோடி அரசின் துரோகம்: வெறுப்பில் இளைஞர்கள் - காங்கிரஸ் காட்டம்!
பிரதமர் மோடி அரசின் துரோகத்தால் இளைஞர்கள் வெறுப்படைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது
தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது, உயரமான விளக்கு கம்பத்தில் சடசடவென ஏறி இளம் பெண் ஒருவர் போராடினார். இதனால், அதிர்ச்சி அடைந்த பிரதமர் மோடி, மகளே அப்படிச் செய்யாதே கீழே இறங்கி வா என்று வேண்டுகோள் விடுத்தார்.
“மகளே நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். கீழே வந்து அமருங்கள். விளக்கு கம்பம் மோசமாக உள்ளது. ஷார்ட் சர்க்யூட் ஆகலாம். இது சரியல்ல. உங்களுக்காகத்தான் இங்கு வந்துள்ளேன். இதுபோன்ற செயல்களைச் செய்வதால் எந்த பயனும் இல்லை.” என பிரதமர் மோடி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த பின்னரே, அப்பெண் மீட்கப்பட்டார்.
இந்த நிலையில், மோடி அரசும், பாஜகவும் இந்திய இளைஞர்களின் கனவுகளையும் அபிலாஷைகளையும் நசுக்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தெலங்கானா சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி அரசின் துரோகத்தால் இளைஞர்கள் வெறுப்படைந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
வந்தனா கட்டாரியாவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து!
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தெலங்கானாவில் பிரதமர் பேசிக் கொண்டிருந்த போது, தேசம் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சனைகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு சிறுமி மின்கம்பத்தின் மீது ஏறியது கவலைக்குரியது. மோடி அரசின் துரோகத்தால் இளம் இந்தியா வெறுப்படைந்துள்ளது. இளைஞர்கள் வேலைகள் வேண்டும் என ஆசைப்பட்டார்கள். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை விகிதமே அவர்களுக்கு கிடைத்தது.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய இளைஞர்கள் சிறந்த பொருளாதாரத்தை எதிர்பார்த்தார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள மல்லிகார்ஜுன கார்கே, “ஆனால், விலை உயர்வே அவர்களுக்கு கிடைத்தது. இது அவர்களின் சேமிப்பை 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைத்துள்ளது. அவர்கள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக ஏங்கினார்கள். ஆனால் அதற்கு ஈடாக அவர்களுக்கு எப்போதும் அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மையை மோடி அரசு வழங்கியது.” என்று சாடியுள்ளார்.
மேலும், 5 சதவீத பணக்கார இந்தியர்கள் 60 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியாவின் செல்வத்தை வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் நடுத்தர வர்க்கமும் ஏழைகளும் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் கார்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
“நமது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான இந்தியா வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பெண்கள், குழந்தைகள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.” என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் விரும்பிய இளைஞர்களுக்கு, வெறுப்பும், பிரிவினையும் கிடைக்கிறது. மோடி அரசும், பாஜகவும் இந்திய இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நசுக்குகின்றனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார்.