Young girl married to 10 people how do you know

கேரளாவில் 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய மணப்பெண்ணை மணமேடையில் வைத்து போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாலினி. இவருக்கு வயது 32. இவர் சில நாட்களுக்கு முன்பு, கணவனை இழந்த பெண்ணுக்கு மணமகன் தேவை என செய்திதாளில் விளம்பரம் செய்திருந்தார்.

இந்த விளம்பரத்தை பார்த்த வாலிபர் ஒருவர் அதில் கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது பெங்களூரில் பணிபுரிந்து வருவருவதாகவும், விரைவில் கேரள உயர்நீதிமன்றத்தில் வேலை கிடைக்கும் எனவும் ஷாலினி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இது 2வது திருமணம் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து பேசி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அப்போது தனக்கு உறவினர்கள் என்று யாரும் கிடையாது எனவும் ஒரு சிலர் மட்டுமே திருமணத்திற்கு வருவார்கள் என்றும் ஷாலினி கூறியுள்ளார்.

இதை நம்பிய வாலிபர் நேற்று காலை பந்தளம் அருகே ஒரு கோயிலில் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்தார்.

மணப்பெண் அலங்காரத்தில் ஷாலினி கோயிலின் மணமேடைக்கு வருவதை கண்ட வாலிபர் ஒருவர் தனது நண்பனின் மனைவி ஷாலினியை கண்டு அதிர்ச்சியுற்றார்.

உடனே, செல்போனில் தொடர்பு கொண்டு நண்பரை வரவழைத்தார். விரைந்து வந்த நண்பர் மணக்கோலத்தில் ஷாலினி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஷாலினி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதை கூறினார்.

இதனால் திருமணத்தை நிறுத்திய மணமகன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் ஷாலினியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அப்போது பணத்திற்கு ஆசைப்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும், இதுவரை 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதாகவும் ஷாலினி வாக்குமூலம் கொடுத்தார்.

ஆரன்முளா, செங்கனூர் ஆகிய காவல் நிலையங்களில் ஷாலினி மீது திருமண மோசடி வழக்குகள் உள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.