ஒரு நபருக்கு பணம் அனுப்புவதற்கும், பெறுவதற்கும் இனி வங்கிக்கணக்கு வைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் எண் வைத்திருந்தாலே போதுமானது.
ஆம், ஆதார் எண் அடிப்படையிலான பரிமாற்றத்தை தபால்நிலையங்களில் பேமெண்ட் வங்கி தொடங்க உள்ளது. இதன் மூலம், வங்கிக்கணக்கு மூலம் தான் பணம் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
இந்திய அஞ்சலகத்தின் பேமெண்ட் வங்கியில் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்தே கணக்கு தொடங்கி பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். வங்கிக்கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தாலும், இணைக்கப்படாவிட்டாலும் அது குறித்து கவலை இல்லை.
இது குறித்து இந்தியா போஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.பி.சிங் கூறுகையில், “ இப்போது வரை ஆதார் எண் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது,
ஆனால், வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்தியா போஸ்ட்டின் பேமெண்ட் வங்கியின் மூலம், ஒருவரின் ஆதார் எண் மட்டுமே வங்கிக் கணக்காக எடுத்துக்கொண்டு, பரிமாற்றம் செய்யலாம்.
தொடக்கத்தில் 650 மாவட்டங்களில் பேமெண்ட் தொடங்கப்பட உள்ளது, அடுத்தடுத்து நாடுமுழுவதும் தொடங்கப்படும்.
இதன் மூலம் வங்கிக்கணக்கு இல்லாமலேயே ஒருவர் பணத்தை பெறவும், அனுப்பவும் முடியும்.
அதாவது ஆதார் எண் வைத்திருப்பவர்கள் இருவருக்கு இடையே பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். அவர்களுக்குள் வங்கிக்கணக்கு தேவையில்லை.
இப்போது சோதனை முயற்சியாக 5 வங்கிகளை இணைத்து நாங்கள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறோம். ஏறக்குறைய 40 கோடி மக்கள் தங்கள் வங்கிக்கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்து இருக்கிறார்கள்.
நாள்தோறும் 2 கோடிக்கு மேலான மக்கள் வங்கிக்கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட் நடைமுறைக்கு வரும்போது, 112 கோடி மக்கள் வங்கிக்கணக்கு இன்றி, ஆதார் எண் மூலமே பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும்'' எனத் தெரிவித்தார்.
