அடுத்தாண்டு முதல் மாணவர்கள் சொந்த மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என்றும், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவு தேர்வு கொண்டு வரும் திட்டம் இல்லை என்றும் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வின்போது, மாணவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். 

இந்த நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் அவர்களுடைய சொந்த மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை ஐஐடி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் கல்வியாண்டு முதல் மாணவர்கள் அவர்களுடைய சொந்த மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இனி வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படாது என்றும் நீட் கேள்விகள் தயாரிக்க நல்ல தமிழ் மொழிப் பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்ப வேண்டும் என்றார்.

மாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும். தேசிய கல்வி கொள்கை விரைவில் கொண்டு வரப்படும் என்றார்.

தமிழகத்தில் அதிகளவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவு தேர்வு கொண்டு வரும் திட்டம் இல்லை என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.