உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எஸ்.சி, எஸ்,டி, மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலும் ரத்து செய்து முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார். 

உத்தரப்பிரதேச தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றபின், கோரக்பூர் எம்.பி.யும் மடாதிபதியுமான யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவி ஏற்றார். 

அதிரடி அறிவிப்புகள்

இவர் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல அதிரடியான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  அரசு அலுவலர்களுக்கு ஒழுக்க நெறிகள், பெண்கள் பாதுகாப்பு விவசாயிகளின் பயிர்கடன் ரூ.36 ஆயிரத்து 500 கோடியை தள்ளுபடி, விவசாயிகளின் நிலுவை மின்கட்டணத்தை அரசே செலுத்துவது எனவும் அவர் அறிவித்தார். 

இந்நிலையில், தனியார் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்றபெயரில் நடக்கும் ஊழல், சாதிப்பாகுபாடு ஆகியவை குறித்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் காலத்தில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. 

தனியார் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து நேற்று முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார். 

 மாநிலத்தில் ஊழலை ஒழிக்கவும், திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.