Asianet News TamilAsianet News Tamil

இறைச்சி கடைகளுக்கு புதிய உரிமம் வழங்குங்க... ஆதித்யநாத் அரசுக்கு ‘குட்டு’ வைத்த உயர் நீதிமன்றம்...

Yogi Adityanath govt denies permission to Allahabad High Court for CMs trial
yogi adityanath-govt-denies-permission-to-allahabad-hig
Author
First Published May 12, 2017, 8:07 PM IST


உத்தரப்பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு உரிமம் புதுப்பித்து தடையில்லா சான்றும், இறைச்சி விற்பனையாளர்களுக்கு புதிய உரிமத்தையும்வழங்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, இறைச்சி விற்பனையாளர்களுக்கும், மாநில அரசுக்கும் இடையே நீடித்து வந்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. 

தேர்தல் வாக்குறுதி

சட்டவிரோத இறைச்சிக்கடைகளை மூடப்படும் என்பது  உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. அதன்படி, பா.ஜனதா கட்சி தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. 

மூட ஆணை

முதல்வராக பதவி ஏற்ற கோரக்பூர் எம்.பி.யும் மடாதிபதியுமான யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக்கடைகளை மூட உத்தரவிட்டார். மேலும், மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி நிர்வாகங்கள் சட்டவிரோத இறைச்சிக்கடைகளை ஒழுங்குபடுத்தவும் ஆணையிடப்பட்டது. 

கடையடைப்பு போராட்டம்

ஆனால், உண்மையில் உரிய உரிமம் பெற்று கடை நடத்தும் சிறுபான்மையினர் கூட வலுக்கட்டாயமாக கடைகளை அடைக்க கட்டாயப் படுத்தப்பட்டதாக செய்திகள் வௌியாகின. 
இதனால், மாநிலத்தில் உள்ள இறைச்சிக்கடை உரிமையாளர்களில் ஒருபிரிவினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். 

வழக்கு

இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் பலர் அரசின் உத்தரவை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவின் விசாரணை நடந்து வந்தது. அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.கே.சிங், வாதிடுகையில், “ உ.பி. அரசின் உத்தரவு என்பது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை செயல்படுத்தும் முயற்சியாகும். சட்டவிரோத கடைகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கீகாரம் பெற்ற கடைகளுக்கு எதிரானது அல்ல ’’ என வாதிடப்பட்டது.  

உத்தரவு

இந்நிலையில், இந்த மனுவின் மீது நீதிபதிகள் ஏ.பி.ஷாகி, சஞ்சய் ஹர்காவுலி பிறப்பித்த உத்தரவில், “ இறைச்சிக்கடைகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், அங்கீகாரத்தை புதுப்பித்தல் போன்ற கடைமைகளில் இருந்து மாநில அரசு நழுவ முடியாது. புதிய இறைச்சிக்கடைகளுக்கு அங்கீகாரமும், ஏற்கனவே இருக்கும் இறைச்சிக்கடைகளுக்கு தடையில்லா சான்றிதழும் வழங்க வேண்டும். ஜூலை 17-ந்தேதி நடைபெறும் அடுத்த கட்ட விசாரணையில் இந்த உத்தரவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios