வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் தங்களின் எம்.பி.பதவியை ராஜினாமா செய்யாமல் காத்திருக்கிறார்கள்.

குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்புதான் இவர்கள் தங்களின் எம்.பி.பதவியை ராஜினாமா செய்வார்கள் எனத் தெரிகிறது.

தேர்தல்

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடும், குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்திலும் முடிய உள்ளது. புதிய குடியரசு தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

பொதுவேட்பாளர்

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை அறிவிக்கும் முடிவுடன் ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. அதேபோல, ஆளும் பா.ஜனதா கட்சியும் தங்களின் சார்பில் வேட்பாளரை நிறுத்த தயாராகி வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகள் அல்லாத மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பா.ஜனதா ரகசியமாக தொடங்கி இருக்கிறது.

முக்கியம்

குடியரசு தலைவர தேர்தலில் எதிர்க்கட்சிகள் அணிசேர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருவதால், ஒவ்வொரு வாக்கும் பா.ஜனதாவுக்கு முக்கியம் ஆகும்.

வாக்களித்தபின்பு

ஆதலால், எம்.பி. பதவி வகித்துக்கொண்டு முதல்வர்களாக இருக்கும் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் மவுரியா, மனோகர் பாரிக்கர், ஆகியோர் குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்பே தங்களின் பதவியை ராஜினாமா செய்வார்கள் என பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, மக்களவை, மாநிலங்கள் அவைகளில் மொத்தம் உள்ள 787 எம்.பி.களில் 418 எம்.பி.கள் ஆதரவு இருக்கிறது. இது அந்த கூட்டணிக்கு சாதகமான அம்சமாகும்.

திடீர் ஆதரவு

சமீபத்தில் ஆந்திர மாநிலத்தின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜகன் மோகன் ரெட்டியும் பா.ஜனதாவுக்கு குடியரசு தலைவர் ேதர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளார். சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா அரசும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைக்குமா?

இந்நிலையில் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆதரவும்  கிடைத்து விடும் என நம்பிக்கையில் பா.ஜனதா கட்சி இருந்து வருகிறது.