Yogi Adityanath
உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சிறுபான்மை மக்களின் நலனில் கவனம் செலுத்தி வரும் முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘ ஏழை முஸ்லிம் ெபண்களுக்கு அரசு செலவில் திருமணம் செய்து வைக்கவும், திருமணத்துக்கு நிதியுதவியும்அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அமோக வெற்றி
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடிசெய்யப்படும் எனத் தெரிவித்து இருந்து. அதற்கேற்றார் போல் 15 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதா கட்சியில் இருந்து கோரக்பூர் எம்.பி.யும் மடாதிபதியுமான யோகிஆதித்யநாத் முதல்வரானார்.
அதிரடி அறிவிப்புகள்
இவர் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல அதிரடியான திட்டங்கள், அரசு அலுவலர்களுக்கு ஒழுக்க நெறிகள், பெண்கள் பாதுகாப்பு என பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் பயிர்கடன் ரூ.36 ஆயிரத்து 500 கோடியை தள்ளுபடி, விவசாயிகளின் நிலுவை மின்கட்டணத்தை அரசே செலுத்துவது எனவும் அவர் அறிவித்தார்.
ஏழை முஸ்லிம் பெண்
இந்நிலையில், ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து சிறுபான்மையினர் அச்சமடைந்து, பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதை தவறு என நிரூபிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள ஏழை முஸ்லிம் குடும்பங்களில் இருக்கும் பெண்களின் திருமணத்தை அரசு நடத்தவும், நிதியுதவி அளிக்கும் திட்டத்ைதயும் செயல்படுத்த உள்ளார்.
நிதியுதவி
இது குறித்து மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மோசின் ராசா கூறுகையில், “ சிறுபான்மையினரின் நலனில் அக்கறை கொண்டு, ஏழை முஸ்லிம் பெண்களின் திருமணத்தை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. திருமணத்துக்கு தேவையான நிதியுதவிகளையும் வழங்க உள்ளது. மத்திய அரசுடன் இணைந்து, ஏராளமான முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்யும் நிகழ்ச்சியையும் நடத்த முதல்வர் ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.
100 பெண்கள்
இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் சத்பவனாமண்டபவங்களில் 100 முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், ஆண்டுக்கு இருமுறை இது போல் செய்யப்படும்’’ எனத் தெரிவித்தார்.
புகார்கள்
உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஏழை முஸ்லிம் பெண் திருமணத்துக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி தரப்படுகிறது. ஆனால், அதை அதிகாரிகள் சிலர் ஊழல் செய்து, கையூட்டு பெற்று முறையாக பணத்தை வழங்குவதில்லை என முதல்வர் ஆதித்யநாத்துக்குபுகார்கள் சென்றன. இதையடுத்து, ஏழை பெண்களின் திருமணத்தை அரசே ஏற்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
