yoga day achieved a new record

சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடியின் பிறந்த மாநிலமான குஜராத்தில் ஒரே இடத்தில் 3 லட்சம் பேர் இணைந்து யோகாசனத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் அமைந்துள்ள பெருந்திடலில் மாபெரும் யோகாசன நிகழ்ச்சி, யோகாசன கலை குருபாபா ராம்தேவ் தலைமையேற்று நடத்தினார்.

இந்த யோகாசன நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத் மாநில முதல்வர் விஜய்ருபானி, துணை முதல்வர் நிதின் பட்டேல், முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் உள்பட பாஜகவினர் மற்றும் அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள், ஐகோர்ட் நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் பிரபல தொழிலதிபர்கள் சராசரி பொதுமக்கள் உள்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பாபா ராம்தேவ் கற்று தந்த சுவாச பயிற்சிகளை செய்தவாறு சுமார் ஒன்றரை மணிநேரம் யோகாசன நிலையில் ஆழ்ந்தனர். இன்று ஒரே இடத்தில் சுமார் 3 லட்சம் மக்கள் ஒன்றாக அமர்ந்து யோகாசனம் செய்த நிகழ்வு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது என பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற முதலாம் சர்வதேச யோகா தினத்தில் டெல்லி ராஜபாதையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 35 ஆயிரத்து 985 பேர் ஒரே இடத்தில் யோகாசனம் செய்த நிகழ்ச்சி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.