கர்நாடக அரசை கவிழ்க்க எடியூரப்பா மேற்கொண்ட முயற்சி 3-வது முறையாக தோல்வியில் முடிந்ததால் பா.ஜ.க மேலிடம் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மை இல்லாத நிலையிலும் தன்னை முதலமைச்சராக்கினால் தான் பெரும்பான்மையை பெற்றுக் காட்டுவதாக எடியூரப்பா கூறினார். இதனை நம்பிய பா.ஜ.க மேலிடம் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தது. 

ஆனால் எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதன் பிறகு குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். ஆனால் ஆட்சி அமைந்த ஒரே மாதத்தில் ஆப்பரேசன் லோட்டஸ் என்ற பெயரில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் சிலரை வளைக்க எடியூரப்பா முயன்றதாக புகார் எழுந்தது. ஆனால் அந்த எம்.எல்.ஏக்களை குமாரசாமி நேரில் அழைத்து பேசி பிரச்சனையை முடித்தார்.

இதன் மூலம் எடியூரப்பாவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததாக குமாரசாமியே வெளிப்படையாக கூறினார். இந்த நிலையில் மீண்டும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 3 பேர் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆறு பேரை ராஜினாமா செய்ய வைத்து குமாரசாமி அரசின் பெரும்பான்மை பலத்தை காலி செய்ய எடியூரப்பா தீவிரமாக முயன்றார். இதன் முதல்கட்டமாக சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 3 பேர் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர். 

மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நான்கு பேரையும் மும்பைக்கு அனுப்பி வைத்தார் எடியூரப்பா. ஆனால் அவர்கள் நான்கு பேரும் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர். இதனால் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் குருகிராமில் முகாமிட்டிருந்த எடியூரப்பா வெறும் கையுடன் பெங்களூர் திரும்பினார். இதனால் ஆப்பரேசன் லோட்டஸ் 3-வது முறையாக தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி வருகிறது. இதனிடையே முதலமைச்சர் பதவி ஏற்றும் பெரும்பான்மையை நிரூபிக்காத போதே எடியூரப்பா மீது பா.ஜ.க மேலிடம் அதிருப்தி அடைந்தது. 

அதோடு மட்டும் அல்லாமல் தற்போது பா.ஜ.க எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு குருகிராமில் தங்கியிருந்துவிட்டு வெறுங்கையோடு திரும்பியதால் அந்த அதிருப்தி மேலும் அதிகமாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. அத்துடன் கர்நாடக பா.ஜ.கவில் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் டெல்லிக்கு புகார்கள் பறந்த வண்ணம் உள்ளன. 

இதனால் விரைவில் எடியூரப்பாவை காலி செய்துவிட்டு சதானந்த கவுடாவை முன்னிலைப்படுத்த பா.ஜ.க மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியால் கர்நாடக மக்களும் எடியூரப்பா மீது அதிருப்தியில் உள்ளதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எடியூரப்பா பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.