Yeddyurappa calls Bengaluru unsafe city for women
பெங்களூரு பெண்களுக்கு பாதுகாப்பான நகர் கிடையாது என்ற எடியூரப்பா கூறியதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, சட்டப்பேரவையில் ஆபாசம் படம் பார்த்த 3 பேருக்கு சீட் கொடுத்த நீங்கள், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் மே 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, கர்நாடகாவில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. காங்ரகிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும என்ற நோக்கத்தில் பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற நிலையில காங்கிரஸ் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக எடியூரப்பா விமர்சனம் செய்தார். இதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையான பதில் கொடுத்துள்ளார்.
பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், பெண்களின் பாதுகாப்பு என்பது சித்தராமையா அரசில் முதன்மை விவகாரமாக இடம்பெறவில்லை என்றார். ஒரு காலத்தில் பாதுகாப்பான நகரம் என இருந்த பெங்களூரு, இப்போது தேசத்தில் பெண்களுக்கான பாதுகாப்பற்ற நகரம் என்று நிலை உள்ளது என்றும், கர்நாடகாடிவல் பாஜக அனைத்து நிலையிலும் பெண்களின் நலனுக்கான பணியில் ஈடுபட்டுள்ளது என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வியை தழுபிவிட்டது என்று கூறியிருந்தார்.
பெண்கள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக எடியூரப்பாவின் விமர்சனத்துக்கு, சித்தராமையா கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார். சட்டசபையில் ஆபாச படம் பார்த்த மூன்று பேருக்கு நீங்கள் சீட் கொடுத்துள்ளீர்கள். உத்தரபிரதேசத்தில் உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை சட்டம் பாதுகாக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீஸ் காவலில் இறந்துள்ளார். உங்களுடைய கட்சியின் எம்எல்ஏக்கள் ஜம்மு-காஷ்மீரில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள். இதுதான் உங்களுடைய சாதனையாகும். பிறகு எப்படி பெண்களின் சக்தி பாரதிய
ஜனதாவுடன் இருக்கும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜகவினர் இளம் ஆண்கள் மற்றும் பெண்களை தாக்குவதை வரவேற்கிறீர்கள். பெண்கள் ஆடையை முறைப்படுத்த விரும்புகிறீர்கள். பெண் செய்தியாளர்களை டுவிட்டரில் இலக்காக்குகிறீர்கள். பிறகு எப்படி நீங்கள் பெண்களின் சக்தி பாஜகவுடன்தான் இருக்கும் என்கிறீர்கள்? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
