புதுடெல்லி, ஜன. 8-

மக்களிடம் இருந்து பிக்பாக்கெட் திருடன் பணத்தை திருடி மோடி நலத்திட்டங்களை அறிவிக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று கடும் குற்றச்சாட்டு வைத்துள்ளர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனதுபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

நாட்டில் கருப்புபணம் பதுக்கியவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வெள்ளையாக மாற்ற பிரதமர் மோடி  உதவி செய்து வருகிறார். செல்லாத ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியிடாவிட்டால் கூட நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதம் இருந்திருக்கும் என்று மோடி கூறி பொய்யான பேச்சுக்களை பேசி வருகிறார்.

நாட்டை ஊழல், கருப்பு பணம் இல்லாமல் சுத்தம் செய்யப்போகிறேன் என்று கூறி புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடைசெய்து அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

கருப்புபணம் கடந்த 50 நாட்களில் எவ்வளவு பிடிபட்டது, வங்கிகளுக்கு எவ்வளவு பணம் வந்தது என்பது குறித்த எந்த புள்ளிவிவரங்களையும் இதுவரை கூறவில்லை. ஆனால், அதற்குள் பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் மோடியும் கருப்புபணத்துக்கு எதிராக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று மார்தட்டுகின்றன.

பிரதமர் மோடி பிக்பாக்கெட் திருடன் போல செயல்படுகிறார். மக்களிடம் இருக்கும் பணத்தை பிக்பாக்கெட் திருடன்போல எடுத்துக்கொண்டு, அதை மீண்டும் அவர்களுக்கே நலத்திட்டம் என்ற பெயரில் அளிக்கிறார். 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வௌிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டு இருக்கும் கருப்புபணத்தை மீட்டுக்கொண்டு வருவேன் என்று மோடி கூறிய வார்த்தையை மோடி இன்னும் நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.