xe varient covid: கவலைப்படாதீங்க! ஒமைக்ரானைவிட XE கொரோனா வைரஸ் தீவிரமானது அல்ல: ககன்தீப் காங் விளக்கம்
xe varient covid: நாம் கவலைப்படும் அளவுக்கு ஒமைக்ரான் வைரஸைவிட எக்ஸ்இ கொரோனா வைரஸ் தீவிரமானது அல்ல. ஒமைக்ரான் பிஏ.1, பிஏ.2 உருமாற்ற வைரஸ்களைவிட பெரிதாக பாதிப்பு ஏற்படுத்திவிடாது என்று மருத்துவரும் பேராசிரியருமான ககன்தீப் காங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாம் கவலைப்படும் அளவுக்கு ஒமைக்ரான் வைரஸைவிட எக்ஸ்இ கொரோனா வைரஸ் தீவிரமானது அல்ல. ஒமைக்ரான் பிஏ.1, பிஏ.2 உருமாற்ற வைரஸ்களைவிட பெரிதாக பாதிப்பு ஏற்படுத்திவிடாது என்று மருத்துவரும் பேராசிரியருமான ககன்தீப் காங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கியதிலிருந்து பல்வேறு உருமாற்றங்கள் அடைந்து மக்களை தாக்கி வருகிறது. ஒவ்வொரு அலையிலும் ஒவ்வொருவிதமான பாதிப்பையும், உயிரிழப்பையும் அளித்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
ஒமைக்ரான் வைரஸ்
கொரோனா வைரலிருந்து உருவமாற்றம் அடைந்த ஒமைக்ரான் 3-வது அலையாக உலக நாடுகளை அச்சுறுத்தியநிலையில் அதிலிருந்து திரிபுகளான ஒமைக்ரான் பிஏ.1, பிஏ.2 ஆகியவையும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இப்போது பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் எக்ஸி வேரியன்ட் வைரஸ் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்மடங்கு வேகமாகப் பரவக்கூடிய வைரஸ், ஒமைக்ரானைவிட பாதிப்பு தீவிரமாக இருக்கும் எனப் பல்வேறு கருத்துகள் வலம் வருகின்றன.
உலக சுகாதார அமைப்பு இந்த எக்ஸ்இ வைரஸ் குறித்து எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸைவிட அதிவேகத்தில் எக்ஸ்இ வைரஸ் பரவும். ஒமைக்ரானின் பிஏ.1, பிஏ.2 ஆகியவற்றின் கலவையாக எக்ஸ்இ வைரஸ் இருக்கிறது.
இந்தியாவில் ஒருவர்?
உலகளவில் பிரிட்டனிலும், அதன்பின் இந்தியாவில் மும்பையில் ஒருவருக்கு எக்ஸ்இ வைரஸ் பாதிப்பு இருந்ததும் கண்டறியப்பட்டது. ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து மாதிரிகளை எடுத்து பரிசோதித்து எக்ஸ்இ வைரஸ் இல்லை எனத் தெரிவித்தது. ஆனால், மகாராஷ்டிரா அரசோ எக்ஸ்இ வைரஸ் என்கிறது.
கவலை வேண்டாம்
இதுகுறித்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் வைரலாஜிஸ்ட், மருத்துவர் ககன்தீப் காங் விளக்கம் அளித்துள்ளார். ஜான்ஹோப்கின்ஸ்-குப்தா கிளின்ஸ்கி இந்தியா நிறுவனம் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
நாம் கவலைப்படுவதைப் போல் கோவிட்டின் எக்ஸ்இ வைரஸ் பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தாது. ஒமைக்ரானின் பிஏ.1, பிஏ.2 ஆகிய திரிபு வைரஸ்களைப்போல்கூட எக்ஸ்இ வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தாது என்பதால் அச்சப்படத் தேவையில்லை
மக்கள் தற்போது பல்வேறு இடங்களுக்கும் சுதந்திரமாகச் சென்றுவருவதால்தான் புதிய உருமாற்றங்கள் வைரஸ்களில் நடக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை எக்ஸ்இ வைரஸைப் பொறுத்தவரை நாம் கவலைப்படத் தேவையில்லை.
ஒமைக்ரான் பிஏ.2 வைரஸ் பற்றிதான் கவலைப்பட்டோம். இந்த வைரஸ் ஒமைக்ரான் பிஏ.1 வைரஸ்போன்று தீவிரமான பாதிப்பைத் தரவில்லை. ஆதலால், பிஏ.1, பிஏ.2 ஆகிய இரு வைரஸ்கள் பாதிப்பு ஏற்படுத்திய அளவைவிட எக்ஸ்இ பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தாது.
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்கள் அதிகரித்துள்ளனர் என்பதால் எக்ஸ்இ உருமாற்ற வைரஸ் குறித்து கவலைப்படத் தேவையில்லை. 60வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதால் பாதிக்கப்படமாட்டோம், பூஸ்டர் டோஸ் பெரிய அளவு பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கு நம்மிடம் தரவுகள் இல்லை.
இவ்வாறு ககன்தீப் காங் தெரிவித்தார்
ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா பேசுகையில் “ பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து ககன் தீப் கூறிய கருத்தை ஏற்கிறேன்.இந்தியாவில் கொரோனா பரவியபின் அனைவரும் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் தன்னம்பிக்கை மட்டும்தான். தன்னம்பிக்கை இருந்தால்தான் இதிலிருந்து மீள முடியும். நம்முடைய சுகாதார முறையிலிருந்தும் நமக்கு நம்பிக்கை கிடைத்தது. ஆனால் எதிர்காலத்தில் அடிப்படை சுகாதார அமைப்பை வலுப்படுத்துவது அவசியம்.அடிப்படை சுகாதார முறைக்கு நாம் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும், அதிகமான பயிற்சியும் அவசியம். முறையான பயிற்சி, அனுபவம் கொண்ட மருத்துவர்களும் தேவை” எனத் தெரிவித்தார்