Asianet News TamilAsianet News Tamil

ஊழலற்ற ஆட்சி உலகிற்கு தேவை: துபாயில் பிரதமர் மோடி பேச்சு!

ஊழலற்ற ஆட்சி உலகிற்கு தேவை என துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்

World needs corruption free Government says PM Modi in World Governments Summit dubai UAE smp
Author
First Published Feb 14, 2024, 3:19 PM IST

பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று பிற்பகலில் அபுதாபி சென்ற அவரை அந்நாட்டு மன்னரும், ஐக்கிய அரபு அமீரக அதிபருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார்.

இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது இரு தலைவர்களின் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ சேவையை பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கும் ‘அஹ்லான் மோடி’ எனும் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அதில் பேசிய பிரதமர் மோடி, ஊழலற்ற ஆட்சி உலகிற்கு தேவை என வலியுறுத்தினார். “இன்று உலகிற்கு அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கங்கள் தேவை, அவை அனைவரையும் அழைத்துச் செல்லும் தூய்மையான ஊழலற்றவையாக இருக்க வேண்டும்.” என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மக்களின் வாழ்க்கையில் அரசுகளின் தலையீடுகள் குறைவாக இருப்பதை உறுதி செய்வது அரசின் வேலை எனவும் அவர் கூறினார். “எனது அடிப்படைக் கொள்கை எப்போதும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி.” என பிரதமர் மோடி தெரிவித்தார். குடிமக்களிடம் தொழில் மற்றும் ஆற்றல் உணர்வு வளரும் சூழலை உருவாக்குவதை தாம் எப்போதும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

இன்று நாம் நம் நாட்டை மாற்றும் போது, உலகளாவிய நிர்வாக நிறுவனங்களிலும் சீர்திருத்தம் இருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பிய அவர், “உலகளவில் முடிவெடுப்பதில் தெற்குலக நாடுகளின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்; தெற்குலக நாடுகளின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்; அவர்களின் முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் பாஜகவில் இணைந்தார்!

செயற்கை நுண்ணறிவு, கிரிப்டோகரன்சி, சைபர் கிரைம் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருக்கும் சவால்களுக்கு உலகளாவிய முன்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும் எனவும், நாம் நமது தேசிய இறையாண்மைக்கு முன்னுரிமை கொடுப்பதோடு சர்வதேச சட்டத்தின் கண்ணியத்தையும் பேண வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

சமூக மற்றும் நிதி உள்ளடக்கம் எங்கள் அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதன் காரணமாக இன்று இந்தியாவில் வங்கிக் கணக்கு இல்லாத 50 கோடிக்கும் அதிகமானோர் வங்கிக் கணக்கு ஆரம்பித்துள்ளனர். இது இந்தியாவை ஃபின்டெக் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் துறைகளில் முன்னோக்கி கொண்டு சென்றுள்ளது என்றார்.பெண்கள் தலைமையிலான வளர்ச்சியையும் ஊக்குவித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

விவசாய ஏற்றுமதி 3ஆவது ஆண்டாக சரிவு: விவசாயிகளின் வருமானம் பாதிப்பு!

உலகளாவிய பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தின் உலகளாவிய மையமாக துபாய் மாறிவருவது பெரிய விஷயம் எனவும் அப்போது பிரதமர் மோடி புகழாரம் சூடினார். முன்னதாக, துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் உடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் இந்து கோயிலை இன்று திறந்து வைக்கும் பிரதமர் மோடி, தனது ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கத்தார் செல்லவுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios