சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வெளியிட்டதை தொடர்ந்து கோயிலுக்கு வரும் பெண்களுக்கு அனுமதியளிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேரள முதலமைச்சருடன் தேவஸ்தானம் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

சபரிமலை கோயிலில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வெளியிட்டது. இந்த தீர்ப்பை இந்து மத அமைப்புகள் எதிர்த்து வந்தபோதிலும், கேரள அரசு வரவேற்பு தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கேரள அரசுக்கும் சபரிமலை தேவஸம் போர்டுக்கும் உள்ள நிலையில், தேவஸ்தான துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பும் அங்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் தேவஸ்தானம் போர்ட்டின் பொறுப்பு என்று கூறினார்.

தேவஸம் போர்டு தலைவர் கே.பத்மகுமார் பேசும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் 17 ஆம் தேதி புதன் கிழமை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 22 ஆம் தேதிகள் வரை இந்த பூஜைகள் நடக்கும். 

அக்டோபர் 3 ஆம் தேதி திருவிதாங்கூர் தேவஸ்தான போர்ட் ஆலோசனைக் கூட்டத்தில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும். 18 ஆம் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. 

இது தொடர்பாக தேவஸம்போர்ட் தலைவர் கே.பத்மகுமார், முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசினார். அப்போது கோயிலுக்கு வரும் பெண்களுக்கு அனுமதிப்பதும் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக கே.பத்மகுமார் கூறினார். சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.