Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் இலவச பேருந்து பயணம்: யாரெல்லாம் பயணிக்கலாம்? - வழிமுறைகள் வெளியீடு!

கர்நாடக மாநிலத்தில் பெண்கள் இலவச பேருந்து திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன

Women free travel bus scheme in karnataka Guidelines released
Author
First Published Jun 6, 2023, 1:26 PM IST

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், க்ருஹ லட்சுமி திட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும், அன்னபாக்யா திட்டத்தில் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும், சக்தி திட்டத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்படும். யுவநிதி திட்டத்தில் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவ‌ர்களுக்கு ரூ.1,500 அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அம்மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றுள்ளனர். இதையடுத்து, அக்கட்சி அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மேற்கண்ட ஐந்து முக்கிய வாக்குறுதிகளுக்கும் கர்நாடக அமைச்சரவை கடந்த 2ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

அதன்படி, மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கும் சக்தி திட்டம் ஜூன் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண்கள் இலவச பேருந்து திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு;

** இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு, பயனாளிகள் தங்கள் அரசு வழங்கிய புகைப்பட அடையாளத்தையும் முகவரிச் சான்றினையும் காட்ட வேண்டும். நடத்துனர்கள் அவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்குவார்கள். அதன் பிறகு, பயனாளிகள் சக்தி ஸ்மார்ட் கார்டுகளை அரசாங்கத்தின் சேவா சிந்து இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொண்டு பயணம் மேற்கொள்ளலாம்.

** சக்தி திட்டத்தின் கீழ் இலவச பயணத் திட்டத்தின்படி, திருநங்கைகள் பயன்பெறலாம்.

** இந்த திட்டத்தின் கீழ் பயணாளர்கள் மாநிலத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டுமே பயணிக்க முடியும். கர்நாடகாவிற்கு வெளியே உள்ள இடங்களுக்கான பேருந்து சேவைகளில் பயணம் செய்யும் பெண்கள், மாநிலத்திற்குள் பயணம் செய்தாலும் டிக்கெட் வாங்க வேண்டும். உதாரணமாக, ஹூப்ளி (கர்நாடகம்) - கோலாப்பூர் (மகாராஷ்டிரா) பேருந்தில் பெல்காமிற்கு ஒரு பெண் பயணம் செய்தால் டிக்கெட் வாங்க வேண்டும்.

மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 2.89 உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

** பெண்களுக்கான இலவச பயணத்திட்டம் சொகுசு பேருந்துகளான ராஜஹம்சா, ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், ஐராவத் கோல்ட் கிளாஸ், நான் ஏசி ஸ்லீப்பர், அம்பாரி டிரீம் கிளாஸ், அம்பாரி உத்சவ், ஃப்ளை பஸ், ஈவி பவர் பிளஸ், வஜ்ரா மற்றும் வாயு வஜ்ரா ஆகிய பேருந்துகளுக்கு செல்லாது.

** இத்திட்டம் மாநிலத்தில் உள்ள நான்கு சாலை போக்குவரத்து கழகங்களான KSRTC, BMTC, NWKRTC மற்றும் KKRTC ஆகியவைகளுக்கு பொருந்தும்.

** KSRTC, NWKRTC மற்றும் KKRTC இன் சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளில் பாதி இருக்கைகள் ஆண்களுக்கு ஒதுக்கப்படும். சொகுசு, ஏசி மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பிஎம்டிசி பேருந்துகளுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

** பெண்கள் பயணம் செய்யும் உண்மையான தூரத்தின் அடிப்படையில் போக்குவரத்து கழகங்களுக்கான தொகையை அரசு திருப்பி செலுத்தும்.

கர்நாடகாவில் உள்ள அரசுப் பேருந்துகளில் தினமும் சுமார் 40 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். இலவச பயணத் திட்டத்தின் கீழ் இந்த எண்ணிக்கை 10 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,700 கோடி செலவாகும். இந்த  திட்டம் அமலுக்கு வந்தவுடன், சிறந்த சேவை வழங்கப்படும் என்று கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) நிர்வாக இயக்குனர் அன்புகுமார் உறுதி அளித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios