உச்ச நீதிமன்றத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது’ என்று கேரள முதல்வர் பிரனாயி அறிவித்துவிட்டு மவுனம் காக்கும் நிலையில், சபரிமலை விவகாரத்தில் பெரும் திருப்புமுனையாக ‘எங்கள் எதிர்ப்பையும் மீறி பெண்கள் உள்ளே நுழைந்தால் ஐயப்ப கோவில் சன்னிதானத்தை இழுத்துமூடுவோம்’ என்று பந்தள மன்னர் அதிரடியாக அறிவித்தார். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோர் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சபரிமலைக்கு சென்றனர். பம்பையில் இருந்து நடந்து சென்ற அவர்களை சுற்றி பாதுகாப்பு கவசங்களுடன் சுமார் 200 போலீசார் பாதுகாப்புக்குச் சென்றனர். 

போலீஸ் புடைசூழ சென்ற பெண்கள் இருவரும் இன்று 9 மணியளவில் சன்னிதானத்தை நெருங்கியபோது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் முழக்கங்கள் எழுப்பினர். சரண கோஷம் எழுப்பிய அவர்கள், பெண்களை உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், அவர்களின் முழக்கங்களை காதில் வாங்கிக் கொள்ளாத போலீசார், தொடர்ந்து அந்த பெண்களை சன்னிதானம் நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து சன்னிதானம் அருகே உள்ள நடைபந்தலில் ஐயப்ப பக்தர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பெண்களை உள்ளே செல்ல ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், தங்கள் பாரம்பரிய நடைமுறைகளை மாற்றக்கூடாது என பக்தர்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டனர். 

இதையடுத்து போலீஸ் ஐஜி ஸ்ரீஜித், அங்கு வந்து பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்திற்கான காரணம் குறித்து கேட்ட அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கூறினார். எனினும் பக்தர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து மேற்கொண்டு என்ன செய்யலாம்? என காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. 

தொடர்ந்து முன்னேறிச் சென்றால், போராட்டமும் தீவிரமடையும் சூழல் இருந்தது. இதையடுத்து, சன்னிதானத்தை நெருங்கிய இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்பும்படி கேரள அரசு உத்தரவிட்டது. கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து அவர்களை வந்தவழியாகவே போலீசார் அழைத்துச் சென்றனர்.