Woman who became mother at 62 passes away an orphan
கேரள மாநிலத்தில் மிக அதிகமான வயதில் குழந்தை பெற்று எடுத்த பெருமைக்குரிய பவானி அம்மா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 76.
இவர் தனது 62வயதில் முதன்முதலாக ஒரு குழந்தையை பெற்று எடுத்து சாதனை படைத்தார். பொதுவாக பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் அந்த வயதில் குழந்தை பெற்றெடுத்தார் பவானி என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த பவானி அம்மா?
பவானி அம்மா எர்ணாகுளத்தில் ஒரு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பவானிக்கு தனது 22 வயதில் திருமணம் ஆனது. ஆனால், குழந்தை பெறுவதற்குள் முதல் கணவர் புற்றுநோயால் இறந்துவிட்டார். அதன்பின் 2-வது திருமணம் செய்தார் பவானி அம்மா. ஆனால், தனது உடலில் உள்ள சில குறைபாட்டால், பவானியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, தனது கணவருக்கு வலுக்கட்டாயமாக வேறு ஒரு திருமணம்செய்து வைத்தார். ஆனால், அவருக்கு குழந்தை பிறந்தபின், அந்த குழந்தையை பார்க்க பவானி அம்மாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால், மனம்தளராத பவானி , நாளேடுகளில் வந்த செய்தியைப் படித்து, 56 வயது பெண் குழந்தை பெற்றதை அறிந்து திருவனந்தபுரத்தில் உள்ள சமது கிளினிக்கை நாடினார். அவர்கள் “ அசிஸ்டட் ரீபுரடெக்டிவ் டெக்னிக்”(ஏ.ஆர்.டி.) மூலம், குழந்தை பெறலாம் எனத்தெரிவித்தனர்.
இதையடுத்து, பவானி அம்மாவுக்கு கருமுட்டை பரிமாற்றம், கருமுட்டையை வளர்த்து கருப்பையில் செலுத்துதல் முறை மூலம் கரு உருவாக்கப்பட்டு 2004ம் ஆண்டு மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
கேரளாவில் 62 வயதில், ஒருபெண்ணுக்கு, மாதவிலக்கு நிற்கும் தருவாயில் குழந்தை பிறந்தது முதல் அதிசயமாக பார்க்கப்பட்டது. இந்த குழந்தையைப் பார்த்து பவானி அம்மாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
பவானி அம்மா குருவாயூர் கிருஷ்ணன் மீது அளவு கடந்த பக்தியாக இருந்ததால், தனது மகனுக்கு கிருஷ்ணன் என பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில், குழந்தை பிறந்த அடுத்த 2 ஆண்டுகளில் தாங்க முடியாத அந்தசோகம் பவானிஅம்மாவுக்கு நிகழ்ந்தது.
வீட்டில் ஒரு பெரிய பாத்திரத்தில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த நீரில் குழந்தை கிருஷ்ணன் விழுந்து பலியானான். தான் தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை கிருஷ்ணன் போய்விட்டானே எனக் பவானி அம்மா இதயம் நொறுங்க அழுதார். அந்த சோகத்தில் இருந்து மீண்டு வர அவருக்கு நீண்ட நாட்கள் தேவைப்பட்டது.
அதன் பின் பவானி அம்மா தனது கடைசி காலத்தைகழிக்க வயநாடு பகுதிக்கு குடிபெயர்ந்தார். அப்போதும் கூட பவானி அம்மா, கடவுள் மீண்டும் எனக்கு ஒரு குழந்தையை கொடுத்து காப்பார் என்று நம்பிக்கையுடன் இருந்தார். வயநாட்டில் மீண்டும் தனது ஆசிரியர் பணியைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு டியூசன்எடுத்து வந்தார்.
62 வயதில் பவானி அம்மா குழந்தை பெற்றவுடன் கேரள மாநிலமே அவரைக் கொண்டாடியது, ஊடகங்கள் அவரின் தன்னம்பிக்கையை புகழந்தன. ஆனால், பவானி அம்மா தனது 76 வயது மூப்புக்கு உரிய நோய்கள், சிறுநீரகக் கோளாறு போன்றவற்றால் அவதிப்பட்டு, கல்பேட்டாவில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த போது அவரின் நிலையை யாரும் கருதிக்கொள்ளவில்லை.
ஏறக்குறைய தான் குழந்தை பெற்று 13 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒருதனியார் மருத்துவமனையில் நோய்வாய்பட்டு பவானி அம்மா திங்கள்கிழமை(இன்று) அதிகாலை இறந்தார் .
இதில் ஒரு கொடுமை என்னவென்றால், பவானி அம்மா இறந்தது குறித்து அவரின் உறவினர்களுக்கு சொல்லி அனுப்பப்பட்டு இன்னும் அவரின் உடலைப் பெற ஒருவரும் முன்வரவில்லை. ஒருவேளை யாரும் பவானி அம்மாவின் உடலைப் பெறாவிட்டால், அவர் கடைசி காலத்தில் கழித்த முதியோர் இல்லமே அவருக்கு இறுதிச் சடங்கு செய்யும்.
