சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட பெண், குடும்பத்தினரால் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் பர்வானியை சேர்ந்த சர்ளா மாலி என்ற பெண், பங்கஜ் மாலி என்பவரை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இருவரும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்தில் உடன்பாடு இல்லாத அந்த பெண்ணின் குடும்பத்தினர், அவர்களை பழிதீர்ப்பதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அந்த பெண்ணின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி, அந்த பெண்ணை அவர்களது ஊரான கொட்டியாவிற்கு பெண்ணின் சகோதரர் அழைத்து சென்றுள்ளார்.

இன்று காலை அவர்கள் வீட்டிலிருந்த கரும்பு வெட்ட வைத்திருந்த கத்தியால் குத்தி அந்த பெண்ணை குடும்ப உறுப்பினர்களே கொலை செய்துள்ளனர்.  இச்சம்பவத்தில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை தேவிதாஸ் கோலி (55) கைது செய்யப்பட்டுள்ளார். தாய் (55) , சகோதரர் ஹரிலால் (25) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த தகவலை கொட்டியா காவல் ஆய்வாளர் ராஜேந்திர இங்லே தெரிவித்துள்ளார்.

சாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக பெண்ணை குடும்பத்தினரே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆணவ கொலைகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் தேசிய அளவில் ஆணவ கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவது நபர் பஞ்சாயத்து செய்வதும் ஆணவ கொலைக்கு காரணமாக இருப்பதால், தம்பதிக்கு இடையே மூன்றாவது நபர் பஞ்சாயத்து செய்வது சட்டவிரோத குற்றச்செயல் என அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஆணவ கொலைகளை தடுக்கும் நோக்கத்திலேயே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள மற்றுமொரு ஆணவ கொலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.