ஜகதீஷ்பூரில் குடும்பத் தகராறில் மனைவி கணவரின் பிறப்புறுப்பைத் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது மனைவி நஸ்னீம் பானு, கணவர் அன்சார் அகமது மீது தாக்குதல் நடத்தியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியே தனது கணவரை கத்தியால் தாக்கி, அவரது பிறப்புறுப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜகதீஷ்பூர் பகுதியில் உள்ள ஃபசன்கஞ்ச் கச்னாவ் கிராமத்தில் சனிக்கிழமை இரவு இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
அன்சார் அகமது (38) என்ற நபருக்கும் அவரது இரண்டாவது மனைவி நஸ்னீம் பானுவுக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அன்சார் அகமதுவுக்கு சபேஜூல் மற்றும் நஸ்னீம் என இரண்டு மனைவிகள் இருந்தபோதும், இருவருக்கும் குழந்தைகள் இல்லை. இதன் காரணமாகவே அடிக்கடி வீட்டில் தகராறுகள் ஏற்பட்டு வந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அன்சார் அகமது, முதலில் ஜகதீஷ்பூர் சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ரேபரேலியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
"இந்தச் சம்பவம் தொடர்பாக, நஸ்னீம் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று ஜகதீஷ்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் ராகவேந்திர தெரிவித்துள்ளார்.
