நாயை காணவில்லை: போஸ்டரை கிழித்தவருக்கு பளார் பெண்!
நாயை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்த நபரை பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தலைநகர் டெல்லி அருகே நொய்டா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. நாய்களை வளர்ப்போரின் அலட்சியப் போக்கால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவைகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், நாயை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்த நபரை பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா செக்டார் 75இல் உள்ள எய்ம்ஸ் கோல்ஃப் அவென்யூ சொசைட்டியில் வசிக்கும் அர்ஷி என்ற பெண், தான் வளர்த்து வந்த நாயை காணவில்லை என போஸ்டர் ஒட்டியதாகவும், அந்த போஸ்டரை கிழித்ததாக நவீன் என்பவருடன் சண்டையிடும் அப்பெண் அவரை தாக்கியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட நவீன் என்பவரின் டி-ஷர்ட் காலரைப் பிடித்து இழுக்கும் அர்ஷி, அபார்ட்மெண்ட் உரிமையாளர்கள் சங்கம் என்ன உச்ச நீதிமன்றத்தை விட பெரியதா? என கேள்வி எழுப்புகிறார். மேலும், நவீனின் தலைமுடியை இழுத்து, அவரை அறைந்தபடி, அவரை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
சில நாட்களுக்கு முன் தனது நாய் காணாமல் போனதை அடுத்து, வீட்டு வளாகத்தைச் சுற்றி அர்ஷி நோட்டீஸ் ஒட்டியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு பெயிண்ட் அடிக்கும் பணி துவங்கியதால் அந்த சுவரொட்டிகளை நவீன் என்பவர் அகற்றியதாக தெரிகிறது. இதுவே இந்த சண்டைக்கு காரணம் என கூறப்படுகிறது.
தொடங்கியது நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: பொதுமக்கள் உற்சாகம்!
இதுகுறித்து செக்டார் 113 காவல் நிலையத்தில் நவீன் புகார் அளித்துள்ளதாகவும், அவரது புகார் மற்றும் வீடியோவின் அடிப்படையில் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.