இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 977 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 154 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 172 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த கொடூர வைரஸிடமிருந்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராடி மீண்டுள்ளனர். 

இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக நான்காம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு சேர்ப்பதற்காக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் பேருந்து சேவைக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. 61 நாட்களுக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ள உள்நாட்டு விமான சேவை மூலம் சொந்த மாநிலத்தில் இருந்து பிற மாநிலத்திற்கு செல்லும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் வந்தடையும் பயணிகள் நேரடியாக வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை, அதற்கு மாறாக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.தனிமைப்படுத்தல் குறித்து கையில் சீல் வைப்பது, உடல் வெப்பநிலை பரிசோதனை போன்ற பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர விரும்பும் விமான பயணிகள் தமிழக அரசின் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயம். அப்படி இ-பாஸ் இல்லாமல் தமிழகத்திற்குள் நுழைய முயன்ற 4 பேர் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து கோவை வந்தடைந்த 4 பேரிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் தமிழகத்திற்குள் நுழைவதற்கான இ-பாஸ் இல்லாததால், அதே விமானத்தில் மீண்டும் டெல்லிக்கே ரிட்டன் அனுப்பிவைக்கப்பட்டனர்.