கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை 1,711 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா சமூக பரவலாக மாறுவதை தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கால் தினக்கூலி தொழிலாளர்கள், மாத ஊதியதாரர்கள், சிறு குறு தொழில்முனைவோர்கள், பெரிய தொழில்நிறுவனங்கள் என அனைத்து தரப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து தரப்பினர் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல்களை கலைவதற்கான அறிவிப்புகளையும் சலுகைகளையும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துவருகின்றன.

நாடே இக்கட்டான சூழலில் இருக்கும் இந்த வேளையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக, நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்துவருகின்றனர். 

டாடா நிறுவனம் சார்பில் ரூ.1500 கோடி பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டது. கோட்டக் மஹிந்திரா பேங்க் சார்பில் ரூ.60 கோடி நிதியுதவி செய்யப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிதியுதவி செய்தது. 

இவ்வாறு தொழில் நிறுவனங்கள் பெரிய தொகையை நிதியுதவியாக செய்துவருகின்றன. இந்நிலையில், விப்ரோ நிறுவனம் சார்பில் ரூ.1,125 கோடி பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்திற்கு அடுத்த அதிகபட்ச தொகையை விப்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது. விப்ரோ சார்பில் ரூ.100 கோடியும் விப்ரோ எண்டர்பிரைசஸ் சார்பில் ரூ.25 கோடியும் அந்த நிறுவனத்தின் தலைவர் அசீம் பிரேம்ஜி அறக்கட்டளை சார்பில் ரூ.1000 கோடியும் என மொத்தம் ரூ.1125 கோடி நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், முதல் ஆளாக ரூ.25 கோடியை நிதியுதவியாக வழங்கினார். பிசிசிஐ தரப்பில் ரூ.51 கோடி நிதியுதவி செய்யப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே, விராட் கோலி, சவுரவ் கங்குலி, சுரேஷ் ரெய்னா, ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோரும் நிதியுதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.