நாடாளுமன்ற குளிர்காலக்‍ கூட்டத்தொடர், அடுத்த மாதம் 16-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவது குறித்து, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங் தலைமையில், கடந்த 13-ம் தேதி நாடாளுமன்ற விவகாரங்களுக்‍கான அமைச்சரவைக்‍ கூட்டம் நடைபெற்றது. இதில், அடுத்த மாதம் 16-ம் தேதி கூட்டத் தொடரை தொடங்கி, டிசம்பர் 16-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு அரசுக்‍கு பரிந்துரைக்‍கப்பட்டது. 

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக்‍ கூட்டத் தொடர், அடுத்த மாதம் 16-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்‍களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்‍குறிப்பில், 16-வது மக்‍களவையின் 10-வது அமர்வு, அடுத்த மாதம் 16-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அரசின் அலுவலர்களுக்‍கு உட்பட்டு இந்த அமர்வு டிசம்பர் 16-ம் தேதி நிறைவுபெற வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்ற அறிவிப்பை, மாநிலங்களவை செயலாளரும் வெளியிட்டுள்ளார். ஒரு மாதம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் உரி தாக்குதல், பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட 'சர்ஜிகல்' நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. மேலும் மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. தொடர்பான மசோதாக்கள் உள்பட பல மசோதாக்களை இந்த தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.