தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காதா? டி.கே சிவக்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்..
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி ஆணையத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்த உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டி.கே சிவக்குமார் “ கர்நாடகாவில் மழை குறைந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், தமிழகத்திற்கு முன்பே தண்ணீர் திறந்துவிட்டோம். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி அடைய வைக்க முடியவில்லை. விவசாயத்திற்கு தண்ணீர் தேவை என்பதை விட, குடிநீருக்காக சேமித்து வைப்பது சவாலான ஒன்று. எனவே இந்த அடிப்படையில், காவரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்படும்.” என்று தெரிவித்தார்,
எனினும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை ஆகியோர் காங்கிரஸ் அரசின் தண்ணீர் திறந்துவிடும் முடிவை விமர்சித்துள்ளனர். அரசியலுக்காகவும், ‘இந்தியா’ கூட்டணியை காக்கவும் கர்நாடக அரசு, மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த டி.கே. சிவகுமார் “ கடந்த காலங்களில் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஆட்சியில் இருந்த போது எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற பட்டியலை நான் கொடுக்கவா? இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே முதன்மையானது.” என்று தெரிவித்தார்.
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு பதிலளித்த அவர் “ நிலைமையை பொறுத்து நாங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவோம். மகதாயி நதி, கிருஷ்ணா நதி மற்றும் பிற மாநிலங்களுக்கு இடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்து நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புகைப்படம்!
முன்னதாக டெல்லியில் கடந்த வாரம் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 37.9 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதையடுத்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்க டி.கே சிவக்குமார் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.