மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவேன் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். 

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால், சட்டீஸ்கரை தவிர மற்ற 2 மாநிலங்களில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு இடங்கள் கிடைக்கவில்லை. ஆகையால் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்களும், ராஜஸ்தானில் 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். 

இந்நிலையில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திடீரென அக்கட்சிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தலித் அமைப்புகள் சார்பில் பாரத் பந்த் நடத்தப்பட்டது. 

அந்த போராட்டத்தின் போது அப்பாவி மக்கள் மீது அப்போது இருந்த பாஜக அரசு பொய் வழக்குகளை பதிவு செய்தன. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. எனவே அந்த பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறுவேன் என்று பகிரங்க தெரிவித்துள்ளார். இது தேசிய அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி கடும் அதிர்ச்சியடைந்துள்யதாக தகவல் தெரிவிக்கின்றன.