உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவாரா மாட்டாரா என்பது நாளை தெரியவரும்.
உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியாகும். இந்தத் தொகுதியில் சஞ்சய் காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே மூன்று முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, தற்போது 4-வது முறையாக களமிறங்கியிருக்கிறார். இந்தத் தொகுதியில் ராகுல் காந்தி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி இராணி களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அமேதி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான துருவ் லால் என்பவர் அமேதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் குறித்த புகாரை அளித்துள்ளார். 
அந்த மனுவில்,“கடந்த 2004-ம் ஆண்டு ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவில், பிரிட்டிஷ் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த முதலீட்டு ஆவணங்களில் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் இந்திய குடியுரிமையை இழந்துவிடுகிறார். எனவே, ராகுல் காந்தியின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ராகுலின் கல்வி சான்றிதழில் ராகுல் வின்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தியும் ராகுல் வின்சியும் ஒரே நபரா? இதில் உள்ள உண்மைத்தன்மையை ஆராய்ந்து அவருடைய அசல் கல்விச் சான்றிதழ்களைச் சரிபார்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 இதனையடுத்து வேட்புமனு பரிசீலனையை திங்கள் கிழமைக்கு (ஏப். 22) தேர்தல் அதிகாரி ஒத்திவைத்தார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி பதிலளிக்க வசதியாக அவகாசம் வழங்கி வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி அளிக்கும் பதிலை பொறுத்தும் ஆவணங்களின் அடிப்படையிலும் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமேதியில் ராகுல் நான்காவது முறை களமிறங்குவாரா இல்லையா என்பது குறித்து நாளை தெரிந்துவிடும். இதற்கிடையே அமேதியில் ராகுல் காந்தியைப் போட்டியிடுவதிலிருந்து தடுக்கும் வகையில் சதி நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அமேதி தொகுதிக்கு மே 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.