கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வாரணாசி, வதோதரா என 2 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார். தேர்தலுக்கு பிறகு வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த முறையும் பாஜகவுக்கு வலுவூட்டும் முயற்சியாக, மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் எனத் தொடக்கம் முதலே தகவல்கள் வெளியாகிவந்தன. குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்து நடைபெறும் ஒடிஷாவில் உள்ள புரி தொகுதியில் மோடி போட்டியிடுவார் எனக் கூறப்பட்டுவருகிறது.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது உ.பி.யில் வாரணாசியில் மோடி போட்டியிட்டதால், அங்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக வெற்றி பெற்றதைப்போல ஒடிஷாவிலும் மோடி போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என்று பாஜகவினர் நம்புகிறார்கள். இந்த முறை ஒடிஷாவில் வெற்றிக்காகக் காத்திருக்கும் அம்மாநில பாஜகவினர், மோடியை புரி தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சி செய்துவருகிறார்கள். 
இந்நிலையில் தென்னிந்தியாவில் குறிப்பாக பாஜகவுக்கு செல்வாக்குள்ள கர்நாடகாவில் போட்டியிடுவார் என பாஜக வட்டாரத்தில் பலமாகப் பேச்சு உலா வருகிறது. கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டன. தெற்கு பெங்களூரூவுக்கு மட்டும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி போட்டியிட வசதியாகத்தான் இந்தத் தொகுதியில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை என்று கர்நாடகா பாஜகவினர் தெரிவிக்கிறார்கள்.


தெற்கு பெங்களூருவில் கடந்த 1991-ம் ஆண்டு முதலே பாஜக வெற்றி பெற்றுவந்திருக்கிறது. மேலும் மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார்  1996 முதல் 2014 வரை தொடர்ச்சியாக 6 முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தொகுதியில் அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினிக்கு சீட்டுக் கொடுக்க பாஜக முடிவு செய்திருந்தது. இந்நிலையில் பெங்களூரு தெற்கில் மோடி போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
 “மோடி தெற்கு பெங்களூருவில் போட்டியிட்டால், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகளில் பாஜக வெல்லும்” என்று கர்நாடக பாஜகவினர் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.