டெல்லிக்கு மாநில சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க தயார் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். இந்திய தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை காவல்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாடடில் இருந்து வருகிறது. தங்களிடம் உள்ள அதிகாரங்கள் மூலம் டெல்லி அரசை மத்திய அரசு அடக்கி வருவதாக தொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருகிறார்.

இதனிடையே டெல்லிக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது கெஜ்ரிவாலின் கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போதைய மக்களவை தேர்தலிலும் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கத் தயார் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

 இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதாக இருந்தால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க ஆதரவு அளிப்போம். எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. யார் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க தயாராகவே உள்ளேன் என தெரிவித்துள்ளார்.