இந்திய மண்ணில் இருந்து இந்தோ பசிபிக் திட்டங்களை வெளியிடுவேன்; ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பெருமிதம்!!
இந்தியாவுக்கு வருகை தந்து இருக்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரதமர் நரேந்திர மோடியுடன் "நல்ல விவாதம்" நடத்தியதாகவும், சர்வதேச சட்ட ஒழுங்கு நடைமுறையை நிலைநிறுத்துவதற்கு தனது நாட்டின் சார்பில் உறுதிப்பாட்டை எடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை டெல்லி வந்தவுடன் மோடியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்திய கிஷிடா, "உலகம் சிரமங்களை எதிர்கொண்டு இருக்கும்போது ஜப்பானும் இந்தியாவும் என்ன பங்கு வகிக்க வேண்டும்?" என்பது குறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். டெல்லி வந்த இவரை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமான நிலையத்தில் வரவேற்று இருந்தார்.
இந்த சந்திப்பின்போது ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கு மோடிக்கு கிஷிடா அழைப்பு விடுத்து இருக்கிறார். அந்த அழைப்பை இந்திய பிரதமர் மோடி "உடனடியாக ஏற்றுக்கொண்டதாகவும் கிஷிடா தெரிவித்துள்ளார்.
தங்களது சந்திப்பின்போது, இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகள் இரு நாடுகளுக்கும் மட்டும் நன்மை பயக்கும் என்பது இல்லை. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியமானது என்று மோடி குறிப்பிட்டதாக கிஷிடா கூறியுள்ளார். உணவு பாதுகாப்பு, பருவநிலை மற்றும் எரிசக்தி, நியாயமான மற்றும் வெளிப்படையான வளர்ச்சி நிதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும் கிஷிடா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஃபுமியோ கிஷிடா கூறுகையில், ''பாதுகாப்பு ஒத்துழைப்பில் உறுதியான முன்னேற்றத்தை மோடி வரவேற்றார். ஜப்பானில் ஜனவரி மாதம் போர் விமானப் பயிற்சியான வீர் கார்டியன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில், ஜப்பானில் நடந்த சர்வதேச கடற்படை ஆய்வு மற்றும் ஜப்பான் கடற்கரையில் நடந்த மலபார் பயிற்சியில் இந்தியா பங்கேற்றது. இதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் இரு கடற்படைகளுக்கும் இடையே ஜப்பான் - இந்திய கடல்சார் பயிற்சி நடைபெற்றது.
இந்தியா ஜி 20க்கு தலைமை தாங்குவது, ஜப்பான் ஜி 7 குழுவிற்கு தலைமை தாங்குவது இரண்டுமே முக்கியமானது என்றும், இது மேலும் அமைதிக்கு வழிவகுக்கும் என்று மோடி கூறியதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகளில் குறிப்பாக பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் குறித்து இரு தரப்பும் மதிப்பாய்வு செய்ததாக பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லியுடன் டோக்கியோவின் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருவதாகவும், இது இந்தியாவின் வளர்ச்சியை ஆதரிப்பதுடன் ஜப்பானுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கிஷிடா கூறினார். அப்போது, "இன்று நான் இந்திய மண்ணில் சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக் திட்டத்தை வெளியிடுவேன்" என்றும் குறிப்பிட்டார்.
இந்தியப் பிரதமர் மோடியை கடந்த 2022ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மூன்று முறை சந்தித்துள்ளார். ஜப்பான் நாட்டிற்கு முன்னாள் பிரதமர் அபே உயிரிழப்புக்கு ஆறுதல் கூறுவதற்கு மோடி சென்று இருந்தபோதும், இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசி இருந்தனர். இதேபோல் நடப்பு 2023ஆம் ஆண்டிலும் இவர்கள் இருவரும் மூன்று முறை சந்தித்து பேசியுள்ளனர். ஜி20, ஜி7 உச்சி மாநாடு, குவாட் மாநாடு ஆகியவற்றில் இருதலைவர்களும் சந்தித்து இருந்தனர்.
இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 20.57 பில்லியன் டாலர் அளவிற்கு 2021-2022ஆம் ஆண்டுகளில் வர்த்தக கூட்டு ஏற்பட்டு இருந்தது. இதில் ஜப்பான் பொருட்களை இந்தியா 14.49 பில்லியன் டாலர் அளவிற்கு இருக்குமதி செய்து இருந்தது.
நடப்பாண்டில் குவாட் ராணுவப் பயிற்சி வரும் மே மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி சீனாவுக்கு எதிரானது இல்லை என்று இருநாடுகளும் தெளிவுபடுத்தி உள்ளன.