wife bruttally attacked by husband
வரதட்சணை கேட்டும், பெண் குழந்தை பெற்றதாகக் கூறியும் பெண் ஒருவரை, கணவர் மற்றும் அவரின் சகோதரர் தாக்கிய சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவைச் சேர்ந்தவர் மீனா கசப். இவரது கணவர் தல்ஜேட் சிங். மீனா கசப்-க்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததற்கு இவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மீனா கசப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
ஆனாலும், மீனாவின் கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் பெண் குழந்தை பெற்ற மீனாவை, தல்ஜேட் சிங் குடும்பத்தினர் கடுமையாக தாக்கி வந்துள்ளனர். ஹாக்கி ஸ்டிக் கொண்டு மீனா தாக்கப்பட்ட வீடியோ ஒன்று வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மீனா கசப் தாக்கப்பட்டது குறித்து அவரது தந்தை, கூறுகையில், மீனாவுக்கு திருமணமாகி 2 வருடமாகிறது. அவளுக்கு பெண் குழந்தை உள்ளது. அவளது குடும்பத்தில் உள்ளவர்கள், வரதட்சணையாக 7 லட்சம் ரூபாய் கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.
மேலும், பெண் குழந்தை பிறந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால், மீனாவை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த நிலையில், மீனா குழந்தையுடன் தனித்து வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக சென்ற வருடமே போலீசில் புகார் அளிக்கப்பட்டு, எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
தற்போது, மகள் மீனா கசப், கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீனாவின் கணவர், அவரின் சகோதரர் மற்றும் நண்பர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டு வந்தாலும், வரதட்சணை - பெண் சிசுவுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இது குறித்த செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருந்தாலும், பஞ்சாபில் நிகழ்ந்த இந்த சம்பவம் நம் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
