ராகுல் கார் மீது கல் வீசிய பிரச்சினைக்குப் பதில் அளித்துப்பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது-

‘‘கடந்த இரண்டு ஆண்டுகளில் ராகுல் காந்தி திட்டமிட்ட அல்லது திட்டமிடப்படாத 121 சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார். 100 முறை குண்டு துளைக்காத கார்களை அவர் பயன்படுத்தவில்லை. இது குறித்து காங்கிரஸ் தலைவர் அலுவலகம் மற்றும் ராகுலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் 72 நாட்களுக்கு 6 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார். இந்தப் பயணத்தின்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.) வீரர்களை அவர் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை.?.

குஜராத்திலும் குண்டு துளைக்காத காரை மறுத்துவிட்டு ‘டொயோட்டா பார்ச்சூனர்’ காரில் அவர் சென்று இருக்கிறார். முன்கூட்டியே திட்டமிடப்படாத இடங்களில் அவர் நின்று சென்று இருக்கிறார். அவர் பங்கேற்ற பேரணி திடலில் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர். பலர் கறுப்புக் கொடியுடன் வந்திருந்தனர்.

அவர் எங்கு சென்று இருந்தார்; எதை மறைக்க முயற்சி செய்கிறார்?. வேண்டும் என்றே இந்த பாதுகாப்பை அவர் தவிர்த்து இருக்கிறார். முன்கூட்டியே அந்த இடத்தை விட்டு ராகுல் சென்றுவிட்டார். லால்சவுக்கில் ஒருவர் ராகுல் கார் மீது கல் வீசி இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது’’.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.