ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருப்பது ஏன்?

மோடி சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் வயநாடு எம்பியாக இருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் எம்பி பதவியை இழந்தார்.

Why is Election Commission not announcing a by-election in Rahul Gandhi's Wayanad constituency?

கர்நாடகா மாநிலம் கோலாரில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ''எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் எம்எல்ஏ., பிரனேஷ் மோடி, சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்து இருந்தார். அதில், ஒட்டுமொத்த மோடி சமுதாயத்தையும் ராகுல் காந்தி இழிவுபடுத்தி இருந்ததாக குற்றம்சாட்டி இருந்தார்.   

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவித்து, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருந்தது. இதையடுத்து, சிறை தண்டனை பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் எம்பியாக நீடிக்க முடியாது என்று மக்களவைச் செயலகம் அறிவித்தது. இதை எதிர்த்து மீண்டும் ராகுல் காந்தி செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு ஏப்ரல் 20ஆம் தேதி சென்று இருந்தார். ஆனால், நீதிமன்றம் இவரது மனுவை நிராகரித்தது.

சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். மே 2ஆம் தேதி இந்த வழக்கு முழுவதும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூலை 7ஆம் தேதி குஜராத்  உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவு சட்டப்படி நியாயமானது என்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் கட்சி அணுகும் என்று தெரிய வந்துள்ளனது.

முன்னதாக எம்பி பதவியை ராகுல் காந்தி இழந்தவுடன் அவருடைய வயநாடு தொகுதியை காலியிடமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து சட்ட அனுமதியும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. யாரும் தடுக்க முடியாது. ஆனாலும், 1951ஆம் ஆண்டின், 151A மக்களவை பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, நாடளுமன்றத்தில் இருக்கும் காலியிடத்தை அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும். ஆனால், இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. காலஅவகாசம் இருக்கிறது. காலியிடம் அறிவிக்கப்பட்ட மார்ச் 23-ஐ கருத்தில் கொண்டு பார்த்தால், இடைத்தேர்தல் செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். 

17வது லோக்சபாவின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடத்திற்கும் மேல் உள்ளதால், இடைத்தேர்தல் மூலம் எம்பி தேர்வு செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கு குறுகிய காலமே இருக்கும் என்றாலும், இடைத்தேர்தலை கைவிட முடியாது என்றே கூறப்படுகிறது. இதனால்தான், ஏற்படும் கால தாமதத்தை குறைக்க நேரிடையாக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது என்று கூறப்பட்டது. 

முன்னதாக லட்சத்தீவு எம்பி மொஹம்மது பைசல், சமாஜ் வாடி தலைவர் அசாம் கான்  இவரது மகன் அப்துல்லா அசாம் கான் தகுதியிழந்த காரணத்தால் அந்தந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 2023 ஜனவரியில் லட்சத்தீவுக்கான இடைத்தேர்தலை அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் பைசல் மீதான தகுதியிழப்பை கேரளா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வாபஸ் பெறும் நிலை ஏற்பட்டது. 

இதனால் தான் இன்னும் ராகுல் காந்தி விஷயத்திலும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ராகுல் காந்தி விஷயத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழிகள் இருப்பதால், தேர்தல் ஆணையமும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யவில்லை என்று கர்நாடகா தேர்தல் அறிவிப்பின்போது தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. 

இருப்பினும், வயநாடு இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு முன் எதுவரை காத்திருக்கும் என்பது பற்றி  தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரை தெளிவான பதில் இல்லை. மார்ச் 29 ஆம் தேதி முதல், சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றமும், தற்போது குஜராத் உயர் நீதிமன்றமும் ராகுல் காந்தியின் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டன. எப்படி பார்த்தாலும், அடுத்த இரண்டு மாதங்களில் எந்த வகையிலும் நிவாரணம் கிடைக்காவிட்டால், வயநாடு இடைத்தேர்தல் தவிர்க்க முடியாததாக அமையும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios