மன்மோகன் சிங் எப்போதும் நீல நிற தலைப்பாகை அணிந்தது ஏன்?; இதுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எப்போதும் நீல நிற தலைப்பாகை அணிந்து இருப்பார். இதற்கு பின்னால் ஒரு சுவராஸ்யமான காரணம் இருப்பது தெரியவந்துள்ளது.
மன்மோகன் சிங் மறைவு
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் நேற்று உடல்நிலை மோசம் அடைந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்ற மன்மோகன் சிங், சிறந்த பொருளாதார நிபுணர் ஆவார். தலைப்பாகை அணிவது சீக்கியர்களின் பொதுவான மரபாகும். ஆனால் மன்மோகன் சிங் எப்போதும் நீல நிற தலைப்பாகை தான் அணிந்து இருப்பார். அதாவது அவர் படிக்கும்போதும், உயர் பொறுப்பில் இருந்தபோதும், பிரதமராக இருந்தபோதும் நீல நிற தலைப்பாகை தான் அணிந்து இருந்தார்.
நீல நிற தலைப்பாகை அணிந்தது ஏன்?
அவர் இந்த குறிப்பிட்ட நிறத்திலான தலைப்பாகையை ஏன் அணிந்திருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த சந்தேகத்திற்கான பதிலை மன்மோகன் சிங்கே 2013ம் ஆண்டு கூறியுள்ளார். அதாவது ''நீல நிறம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால் அந்த நிறத்தில் தலைப்பாகை அணிந்திருக்கிறேன். மேலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நிறம் நீலம். அங்கு நான் படித்த நாட்கள் அழகானவை. அவை எனது நினைவுகள் எப்போதும் ஆழமாக பதிந்து இருக்கும் வகையில் நீல நிற தலைப்பாகை அணிந்துள்ளேன்'' என்று மன்மோகன் சிங் கூறியிருந்தார்.
மன்மோகன் சிங் கடந்த 1957ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ல கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் மேற்படிப்பு படித்தார். கடந்த 2006ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு சட்ட முனைவர் பட்டம் வழங்கியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நிறம் நீலம் என்பது குறிப்பிடத்தக்கது. மன்கோகன் சிங் சிறந்த படிப்பாளி என்பது மட்டுமின்றி கல்வியை போதிக்கும் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
வர்த்தகப் பேராசிரியர்
1957 முதல் 1959 வரை பொருளாதாரத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1966ம் ஆண்டு டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கெளரவப் பேராசிரியரானார். 1969 முதல் 1971ம் ஆண்டு வரை சர்வதேச வர்த்தகப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1976ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.