Fathers Day 2023: அன்னையர் தினத்திற்கான அங்கீகாரம் உடனடியாக கிடைத்து விட்ட நிலையில், தந்தையர்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைக்க சில காலம் தேவைப்பட்டது.
தந்தையர் தினத்தன்று மக்கள் தங்களின் வாழ்வின் மிக முக்கிய நபரை கொண்டாடுவதற்கான சமயம் ஆகும். சிறுவர்கள் இந்த தினத்தில் தங்களின் தந்தை அல்லது தந்தைக்கு நிகரானவர்கள் இடம் தங்களின் அன்பை வெளிப்படுத்தலாம். தந்தையர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு உள்ளிட்டவைகளை பாராட்டி அவர்களுக்கு அன்பு செலுத்தவே தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தந்தையர் தினத்தை நம்மில் பலரும் கொண்டாடினாலும், இந்த தினத்திற்கான பாரம்பரியம் எப்படி தொடங்கியது என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். துவக்கத்தில் இந்த தினத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. காலப் போக்கில் மக்கள் தந்தையர்களை கொண்டாடும் வழக்கத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.
ஏன் தந்தையர் தினத்தை கொண்டாடுகிறோம்?
இன்று உலகில் தந்தையர் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் வாஷிங்டன் பகுதியை சேர்ந்த சொனோரா ஸ்மார்ட் டாட் தான் எனலாம். இவர் தான் தந்தையர் தினத்தின் நிறுவனர். தாய் இல்லாத ஆறு குழந்தைகளை வளர்த்தெடுத்த தந்தைக்கு அன்பு செலுத்த வேண்டும் என்ற காரணத்தில் டாட் தந்தையர் தின கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தாய் இல்லாமல் தந்தையிடம் வளர்ந்த ஆறு குழந்தைகளில் சொனோரா ஸ்மார்ட் டாட் ஒருவர் ஆகும்.

அந்த காலக்கட்டத்தில் தந்தையர் தின கொண்டாட்டத்தை நடத்துவதற்கு அனைத்து முன்னெடுப்புகளில் தீவிரம் செலுத்திய ஸ்மார்ட் டாட், அதில் வெற்றியும் பெற்றார். ஒரு ஆண்டு தீவிர முயற்சியின் பலனாக ஜூன் 19, 1910 அன்று தந்தையர் தினத்தை கொண்டாட வாஷிங்டன் மாநிலம் ஒப்புதல் அளித்தது. அன்னையர் தினத்திற்கான அங்கீகாரம் உடனடியாக கிடைத்து விட்ட நிலையில், தந்தையர்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைக்க சில காலம் தேவைப்பட்டது.
1916 முதல் 1924 வரை ஆட்சி செய்த அதிபர்களான வில்சன் மற்றும் கால்வின் கூலிட்ஜ் ஆகியோர் தந்தையர் தினம் கொண்டாட தங்களின் ஆதரவை தெரிவித்தனர். அதிபர் கூலிட்ஜ் மாநில அரசுகள் சார்பில் தந்தையர் தின விடுமுறையை கொண்டாட வலியுறுத்தி இருந்தர். அதன் பின் பல தசாப்தங்கள் கழித்து தந்தையர் தினத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆண்களிடம் தந்தையர் தின கொண்டாட்டம் பற்றி அதிக ஆர்வம் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஏன் கொண்டாட வேண்டும்?
தந்தையர் தின கொண்டாட்டம் பற்றி அதிக சர்ச்சைகள் ஏற்பட்டு வந்த நிலையில், தந்தையர்களின் முக்கியத்தும் குறித்த விழிப்புணர்வு நாளடைவில் அதிகரிக்க துவங்கியது. 1970-க்களில் மனநல மருத்துவர்கள் தந்தையர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிபதன் அவசியம் குறித்து புரிந்து கொள்ள ஆரம்பித்தனர்.
தந்தை இன்றி வளரும் குழந்தைகள் அதிக அபாயம் உள்ள நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம். தந்தை அரவணைப்பில் வளரும் குழந்தைகள் மனதளவில் திடமாகவும், சமூக பொறுப்புடன் உள்ளனர். இதன் காரணமாகவே பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் நியமனத்திற்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
