கர்நாடகாவில் அபாரமாக வெற்றி பெற்றும் நெருக்கடியில் தலைமை; திகைக்க வைக்கும் காரணங்கள்!!
கர்நாடகா தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாட்கள் ஆன பின்னரும் இன்னும் யார் முதல்வர் என்ற கேள்வி நீடித்து வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்து இருக்கும் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் உத்வேகத்தை கொடுத்துள்ளது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அதிக இடங்களில் அதாவது 135 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால், இன்னும் கர்நாடகா மாநிலத்திற்கு யார் முதல்வர் என்பதில் சிக்கல் நீடிக்கிறது.
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா. அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பவர் டிகே சிவகுமார். தினேஷ் குண்டு ராவ் காங்கிரஸ் கட்சி தலைமையில் இருந்து நீக்கப்பட்டபோது தலைமைப் பெறுப்பை ஏற்றவர். கர்நாடகா மாநில கட்சி வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவரது மீது இருக்கும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் கட்சி தலைமையை மிரட்டுகிறது.
கர்நாடகாவின் அடுத்த காங்கிரஸ் முதல்வர் இவர்தானா? விட்டுக் கொடுப்பாரா சித்தராமையா?
இதற்கு காரணம், நடப்பாண்டின் இறுதியில் தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தின் மிகப்பெரிய வெற்றி மற்ற மாநிலங்களின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்று காங்கிரஸ் தலைமை நம்புகிறது. இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்து இருக்கும் வழக்கை மீண்டும் கையில் எடுத்தால், சிவகுமாருக்கு மட்டுமின்றி கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படும் என்று காங்கிரஸ் தலைமை பயப்படுகிறது.
ஆனால், டிகே சிவகுமார் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். கட்சிக்கு நெருக்கடியான சூழலில் முன் நின்று தீர்த்து வைத்தவர். இன்றும் கர்நாடகா காங்கிரசுக்கு ஒரு தூணாக சிவகுமாரைத்தான் காங்கிரஸ் தலைமை பார்க்கிறது. மறுபக்கம் எந்த ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாத சித்தராமையாவின் நெருக்கடி. தன் பக்கம்தான் எம்எல்ஏக்கள் இருக்கின்றனர் என்று தலைமைக்கு சொல்லாமல் நெருக்கடி கொடுத்து வருகிறார். ''நான் பிளேக்மெயில் செய்யமாட்டேன்'' என்று தலைமைக்கு சிவகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
தேர்தல் முடிந்த பின்னர் எம்எல்ஏக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியதாகவும், அதில் 90% எம்எல்ஏக்கள் சித்தராமையாவுக்கு ஆதரவு அளித்ததாகவும் செய்தி வெளியானது. ஆனால், அதுபோன்ற வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று சிவகுமார் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். கட்சி தலைமை தனக்கு கைகொடுக்கும் என்றும், யார் முதுகில் குத்த மாட்டேன் என்றும் சிவகுமார் கூறி வருகிறார்.
முதல்வராக சிவகுமார் ஆகும்பட்சத்தில் அவருக்கு எதிராக வழக்குகள் தூசி தட்டப்படும். மீண்டும் கைது என்றால் அது கட்சிக்கு அவமானம் என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது. தேர்தலில் வேட்புமனு செய்த பின்னர் அவருக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் முள் மேல் போட்ட துணியை எடுப்பது போன்ற நிலையில் கட்சித் தலைமை இருக்கிறது. ''கட்சிக்காக உழைத்து இருக்கிறேன். கட்சிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளேன். தலைமை மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன்'' என்று சிவகுமாரும் உருட்டி வருகிறார். இந்த முறை வாய்ப்பு இல்லை என்றால், பின்னர் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று சிவகுமார் உணருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவருக்கும் இரண்டரை ஆண்டுகள் என்ற பஞ்சாயத்துக்கு சென்றாலும், முதல் இரண்டரை ஆண்டுகள் தான் இருக்க வேண்டும் என்ற முடிவில் சிவகுமார் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் வரும் இரண்டரை ஆண்டுகளில், வழக்குகளின் போக்கைப் பொறுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகாமல் என்று சிவகுமார் கருதுவதாக கூறப்படுகிறது. முதல்வர் என்ற முடிவில் சிவகுமார் உறுதியாக இருப்பதால், துணை முதல்வர் என்ற பேச்சும் தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
கர்நாடகா மட்டுமின்றி வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு பொருளாதார ரீதியாக சிவகுமாரால் கட்சிக்கு உதவ முடியும் என்று தலைமை நம்பி இருக்கிறது. எனவே, சித்தராமையா, சிவகுமார் இருவரையும் சமாதானப்படுத்தும் வேலையில் தலைமை ஈடுபட்டு வருகிறது. கர்நாடகா காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கும் சந்தீப் சிங் சுர்ஜிவாலா டெல்லியில் சமாதானப் பேச்சில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால், இவரது பேச்சை சிவகுமார் கேட்கமாட்டார் என்றும், சோனியா காந்தியின் பேச்சுக்கு மட்டுமே கட்டுப்படுவார் என்றும் கூறப்படுகிறது. டெல்லியில் சோனியா காந்தி இல்லை. அவர் ஜம்மு காஷ்மீர் சென்று இருப்பதாகவும், இன்று டெல்லி திருப்புவார் என்றும் கூறப்படுகிறது. இன்றோ, நாளையோ தெரிந்துவிடும் யார் முதல்வர் என்பது.