தேவையில்லாத சர்ச்சையை ஏன் உருவாக்குகிறீர்கள்? சோனியா காந்திக்கு பாஜக கேள்வி!
பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியிருந்த நிலையில், தேவையில்லாத சர்ச்சையை ஏன் உருவாக்குகிறீர்கள் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர், செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் எதற்காக கூட்டப்படுகிறது என்பதை இதுவரை ஆளும் பாஜக அரசு அறிவிக்கவில்லை.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தில் உடனடி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கை, அதானி குழும முறைகேடுகள், மணிப்பூர் விவகாரம், ஹரியானா வகுப்புவாத பதற்றம், சீனாவின் ஆகிரமிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, மத்திய-மாநில உறவுகள், இயற்கை பேரழிவுகளின் தாக்கம் என்பன உள்ளிட்ட 9 பிரச்சனைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தேவையில்லாத சர்ச்சையை ஏன் உருவாக்குகிறீர்கள் என சோனியா காந்திக்கு பஜக கேள்வி எழுப்பியுள்ளது. சோனியாவின் கடிதத்துக்கு பதிலளித்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஏன் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“நமது ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை அரசியலாக்கி தேவையற்ற சர்ச்சையை இல்லாத இடத்தில் உருவாக்க முயல்வது மிகவும் வருந்தத்தக்கது. சட்டப்பிரிவு 85இன் கீழ் அரசியலமைப்பு ஆணையை பின்பற்றி பாராளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு கூட்டத்தொடரின் கடைசி அமர்வுக்கும் அடுத்த கூட்டத்தொடரின் முதல் அமர்விற்கும் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு இடையில் 6 மாதங்கள் இடைவெளி இருக்கக்கூடாது என்ற அடிப்படையில், அவையை நடத்துவதற்கு பொருத்தமான நேரம் என கருதும் சமயத்தில் குடியரசுத் தலைவர் அவ்வப்போது ஒவ்வொரு நாடாளுமன்ற அவையையும் கூட்டி வருகிறார்.” என பிரகலாத் ஜோஷி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்ளுப் பேரன்: என்ன காரணம்?
செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு, முழுமையான நடைமுறையைப் பின்பற்றி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகுதான் குடியரசுத் தலைவரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
ஒருவேளை நீங்கள் மரபுகளில் கவனம் செலுத்தாமல் இருக்கலாம் என சாடியுள்ள அவர், “நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுவதற்கு முன், அரசியல் கட்சிகளிடம் விவாதிக்கப்படுவதில்லை; கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதில்லை. கூட்டத்தொடர் துவங்கிய பிறகே அனைத்து கட்சிகளுடனான கூட்டம் நடத்தப்படுகிறது.” எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்படும் என்றும், அரசியல் சர்ச்சைகளுக்கு நாடாளுமன்ற அவைகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக அக்கடிதத்தில் பிரஹலாத் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.