பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த போதிலும், நிதிஷ் குமாரே முதல்வராக தொடர்வார் என அக்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 200 இடங்களுக்கு மேல் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெறவது உறுதியாகிவிட்ட நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

NDA கூட்டணி இந்தத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 96 இடங்களில் முன்னிலையுடன் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) 85 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணி 27 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. ஆர்.ஜே.டி. எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதே கேள்விக்குறியாக உள்ளது.

முதலமைச்சர் பதவி யாருக்கு?

இந்த வெற்றிக்குப் பின்னரும், முதலமைச்சர் பதவி குறித்துப் பல ஊகங்கள் நிலவுகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், நிதிஷ் குமாரே முதலமைச்சராகத் தொடர்வார் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மகாகத்பந்தன் கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளரை உடனடியாக அறிவிக்காதது குறித்து NDA-வை கடுமையாக விமர்சித்துள்ளது.

குழப்பதைத் தூண்டிய பதிவு

இந்தச் சூழலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூக ஊடகப் பதிவு ஒன்று குழப்பத்தை அதிகப்படுத்தியுள்ளது.

"கடந்த காலமும் அல்ல, எதிர்காலமும் அல்ல. நிதிஷ் குமார் பீகாரின் முதலமைச்சராக இருந்தார், இருக்கிறார், தொடர்ந்து இருப்பார்," என்று கூறிய பதிவு வெளியிட்ட சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்டது. இது முதலமைச்சர் பதவி குறித்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆவாரா?

மாநில அரசியலில் மிக நீண்ட காலம் முதலமைச்சராகப் பதவி வகித்தவர்களில் ஒருவரான நிதீஷ் குமார், கடந்த 20 ஆண்டுகளில் கூட்டணி எதுவாக இருந்தாலும், பெரும்பான்மையான காலத்திற்கு முதல்வர் பதவியில் இருந்துள்ளார். அவர் பத்தாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பாரா என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, பாட்னாவில் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகப் பல போஸ்டர்கள் வைக்கப்பட்டன. 'புலி இன்னும் உயிரோடு இருக்கிறது' ('Tiger abhi zinda hai') மற்றும் '25 முதல் 30 வரை, மீண்டும் நிதிஷ்' ('25 se 30, phir se Nitish') போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பாட்னாவில் காணப்படுகின்றன.

ஜேடியு செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், "நிதீஷ் குமார் ஜி விரும்பும் வரை முதலமைச்சராகத் தொடர்வார்" என்று தெரிவித்துள்ளார்.