முதல் தேர்தலிலேயே வெற்றியை ருசித்த திருமகன் ஈ.வெ.ரா.
ஈரோட்டு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்பைப் பார்க்கலாம்.
தமிழகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் – வரலட்சுமி தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். ராம் என்ற இயற்பெயர் கொண்ட இவர், மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே. சம்பத் அவர்களின் பேரன். தந்தை பெரியாரின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமி அவர்களின் கொள்ளுப்பேரன்.
இவரது தந்தை 1985 முதல் 1988 வரை சத்தியமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கோபிசட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். 2014 முதல் 2017 வரை தமிழகக் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தார்.
1999ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக இருந்தவர். 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட இவர் அதிமுக வேட்பாளர் எம். யுவராஜாவை 8,523 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக பதவி வகித்த திருமகன் ஈவெரா இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை தீடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர்.
திருமகன் ஈ.வெ.ரா.வின் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.