Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக முதல்வர் யார்? காங்கிரஸின் திட்டம் இதுதான்.. இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கர்நாடகாவின் புதிய முதலமைச்சரின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Who is the Chief Minister of Karnataka? This is the plan of the Congress.. The official notification will be released today
Author
First Published May 16, 2023, 10:42 AM IST

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிஅமைக்க உள்ளது. எனினும் கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமாருக்கும் கடும் போட்டி நிலவுகிறது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவருமே காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றிக்கு சமமாக பங்கு வகித்துள்ளனர்.

இந்த சூழலில் இருவரையும் டெல்லிக்கு அழைத்தது கட்சி தலைமை. அதன்படி சித்தராமையா நேற்று டெல்லி சென்ற நிலையில், டி.கே.சிவக்குமார் வயிற்று வலி என்று கூறி தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார். இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் அடுத்த கட்ட ஆலோசனை நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் கே.சி வேணுகோபால், ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் மல்லிகார்ஜுன கார்கே விவாதிக்க உள்ளார்.

இதையும் படிங்க : ஓபிஎஸ் பற்றி பேச உனக்கு தகுதியே இல்லை.. அவரு இல்லைனா உன் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாய் இருக்கும்! வைத்தியலிங்கம்

இந்நிலையில் கட்சி தலைமையின் அழைப்பின் பேரில் டி.கே. சிவக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நான் டெல்லிக்குப் போகிறேன். சோனியா காந்தி என்னை தனியாக அழைத்துள்ளார். என் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது. மக்கள் எங்கள் கட்சிக்கு ஆசி வழங்கியுள்ளனர். அரசியலமைப்பைக் காப்பாற்ற விரும்புகிறோம். நான் என் கடமையை செய்தேன். கட்சியே எனது கோயில்.

எங்களுடைய கட்சி ஒற்றுமையாக உள்ளது. நாங்கள் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நான் இங்கு யாரையும் பிரிக்க விரும்பவில்லை. அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் ஒரு பொறுப்பான நபர். நான் முதுகில் குத்தவும் மாட்டேன், பிளாக்மெயில் செய்யவும் மாட்டேன்” என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சரின் பெயரை இன்று வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக சித்தராமையாவை நியமிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கி அவரை சமாதானப்படுத்தவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டி.கே. சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து சோனியா, ராகுலுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு கார்கே, கர்நாடக முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : தனியார் விற்றால் கள்ளச்சாராயம்? நீங்கள் விற்றால் புனிதத் தீர்த்தமா? ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் சீமான்..!

Follow Us:
Download App:
  • android
  • ios