புதுடெல்லி சட்டசபை தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவிடம் தோல்வி அடைந்தார். பர்வேஷ் சிங் வர்மா தொடக்கம் முதலே முன்னிலை வகித்து இறுதியில் வெற்றி பெற்றார்.

புதுடெல்லி சட்டசபை தொகுதியை பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவிடம் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்தார்.

டெல்லி சட்டசபை தேர்தலை நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. கடந்த இரண்டு முறையும் டெல்லியை ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சி செய்தது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார். இவர் மீது மதுபான ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பின்னர், சிறைக்கு சென்றார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஆதிஷ் முதல்வராக பதவியேற்றார்.

பாஜக, ஆம் ஆத்மி யார் முன்னிலை?
தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. ஏறக்குறைய ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கான இடங்களை பாஜக பிடித்துள்ளது. பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட ஆத் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் திணறி வருகின்றன. காங்கிரஸ் கட்சி காட்சியில் இல்லை என்று கூறும் அளவிற்கு பின் தங்கியுள்ளது. ஆம் ஆத்மி தற்போதும் 22 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது என்றாலும். பாஜக, ஆம் ஆத்மி இடையிலான இடைவெளி குறைவாக இருக்கிறது. போகிற போக்கில் பாஜக டெல்லியை ஸ்வீப் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

புதுடெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் வேட்பாளராக பர்வேஷ் சிங் வர்மா நிறுத்தப்பட்டார். இந்த தொகுதி துவக்கத்தில் இருந்தே உற்று நோக்க வைத்தது. ஆரம்பத்தில் இருந்தே பர்வேஷ் சிங் வர்மா முன்னிலை வகித்து வந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலை பர்வேஷ் தோற்கடித்து இருப்பது பாஜகவில் அவரது செல்வாக்கை உயர்த்தி இருக்கிறது. அதேசமயம், ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

மண்ணை கவ்விய அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா.. ஆம் ஆத்மியை துரத்தும் சோகம்

எக்ஸ் தளம்:
அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பின்னர் தனது எக்ஸ் தளத்தில். ''ஜெய் ஸ்ரீராம்'' என்று பர்வேஷ் பதிவிட்டுள்ளார்.

யார் இந்த பர்வேஷ் வர்மா?
டெல்லியின் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான சாஹிப் சிங் வர்மாவின் மகன்தான் பர்வேஷ் வர்மா. இவரது சித்தப்பா ஆசாத் சிங் வடக்கு டெல்லியில் மேயராக போட்டியிட்டார். 2013ஆம் ஆண்டில் ஆசாத் பாஜக டிக்கெட்டில் முந்த்கா தொகுதியில் போட்டியிட்டார்.

முதல் டெல்லி வெற்றி:
பர்வேஷ் வர்மா, 2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மெஹ்ராலியில் இருந்து போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சியின் (AAP) நரிந்தர் சிங் சேஜ்வால் மற்றும் காங்கிரஸ் தலைவர் டாக்டர் யோகானந்த் சாஸ்திரியை எதிர்த்துப் போட்டியிட்டார். வர்மா 4,564 வாக்குகள் வித்தியாசத்தில் சேஜ்வாலை தோற்கடித்தார்.

மக்களவை தேர்தலில் வெற்றி:
2014 மக்களவைத் தேர்தலில், மேற்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மியின் ஜர்னைல் சிங் மற்றும் காங்கிரஸ் எம்பி மகாபல் மிஸ்ராவை தோற்கடித்து வர்மா வெற்றி பெற்றார். இருப்பினும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அவருக்கு டிக்கெட் கொடுக்க மறுத்தது.

சத்யேந்தர் ஜெயின் தோல்வி.. கடைசியில் அதிஷி பெற்ற வெற்றி - டெல்லி தேர்தல் முடிவுகள்!

தேர்தல் பிரச்சாரம்:
புதுடெல்லி சட்டசபைத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, வர்மா "ஹர் கர் நௌக்ரி" (ஒவ்வொரு வீட்டிற்கும் வேலை) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கினார். "ஹர் கர் நௌக்ரி எங்களது வாக்குறுதி. வேலைவாய்ப்பு கண்காட்சி மூலம், இளைஞர்களுக்கு அவர்களது திறமை, தகுதிகளின் அடிப்படையில் வேலை வழங்க இருக்கிறோம். அதுதான் எங்களது நோக்கம்'' என்று தெரிவித்து இருந்தார். 

பர்வேஷ் மகள்கள்:
பர்வேஷ் சிங் வர்மாவுக்கு திரிஷா, சனிதி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் தந்து தந்தைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த புதுடெல்லி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ''வாக்களித்த புதுடெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பொய் சொல்லி ஆட்சி நடத்தி வந்தவருக்கு இரண்டாவது முறை டெல்லி மக்கள் ஆதரவு தர மாட்டார்கள், மீண்டும் அந்த தவறை செய்யமாட்டார்கள் என்பது தெரியும். வெற்றி பெறுவோம் என்பது எங்களுக்குத் தெரியும். சரியான நேரத்திற்காக காத்திருந்தோம். டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இலவச பஸ் விஷயத்தில் ஆம் ஆத்மி என்ன செய்தார்கள் என்பது தெரியும்'' என்று தெரிவித்துள்ளனர்.

மணீஷ் சிசோடியா:
இதற்கிடையில், ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா ஜங்புராவிலிருந்து தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். "வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர்கள் ஜங்புரா மக்களின் முன்னேற்றம் மற்றும் நலனில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்," என்று மணீஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.