காஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ முகமத் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் யார்?: 1968ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூர் பகுதியில், ஒரு அரசுப்பள்ளி தலைமையாசிரியருக்கு 3ஆவது மகனாகப் பிறந்தவர் அசார். இவரது உடன் பிறந்தோர் மொத்தம் 11 பேர். 

கராச்சியில் படித்த அசார், ஹர்கத் அல் அன்சார்- என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார், பல தாக்குதல்களில் பங்கேற்றதால் விரைவில் அந்த அமைப்பின் ஒரு பிரிவுக்குத் தலைவர் ஆனார்.

பின்னர் உருது பத்திரிகையான சதே முஜாஹிதீன் மற்றும் அரபு பத்திரிகையான ஸ்வதே காஷ்மீர் ஆகியவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

படிப்படியாக ஹர்கத் அல் அன்சார் தீவிரவாத அமைப்பின் பொதுச்செயலாலரான அசார் அந்த அமைப்புக்கு நிதி திரட்டவும், ஆட்களை பணியமர்த்தவும் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

1994ஆம் ஆண்டில் ஹர்குதல் அல் அன்சர் அமைப்பில் நிலவிய கோஷ்டி மோதலைத் தடுக்க காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகருக்கு வந்த மசூத் அசார் அங்கே இந்திய அரசால் கைது செய்யப்பட்டார்.

 1999ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட போது, மக்களை மீட்க அவர் பிணையாக விடுவிக்கப்பட்டார். 

பின்னர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்த அசார், ஜெய்ஷ்-இ-முக்மத் பயங்கரவாத அமைப்பின் தலைவரானார். 

2001ஆம் ஆண்டில் ஜெய்ஷ்-இ-முக்மத் பயங்கரவாத அமைப்பு இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியது. இதில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

இந்திய அரசின் அழுத்தம் மற்றும் சர்வதேச நெருக்கடி காரணமாக, அசார்  பாகிஸ்தானில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார், ஆனால் வழக்கு எதுவும் பதியப்படாத நிலையில், 2002ஆம் ஆண்டு லாகூர் நீதிமன்ற உத்தரவால் அவர் விடுவிக்கப்பட்டார்.

2008ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் நடந்தபோதும் அதற்கு அசாரே மூளையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அசார் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் அதை பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.

பின்னர் 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலிலும் ஜெய்ஷ் இ முகமத் அமைப்புக்கு தொடர்பு இருந்தது.

 அப்போது அசார் பாகிஸ்தானில் போலீஸ் காவலில் இருப்பதாக பாகிஸ்தான் பிரதரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் செய்தி வெளியிட்டார். ஆனால் பாகிஸ்தான் அரசின் முதல் தகவல் அறிக்கையில் அசாரின் பெயரே இல்லை.

பாகிஸ்தான் அரசின் தொடர் நடவடிக்கைகள் அவர்கள் மவுலானா மசூத் அசாருக்கு அவர்கள் ஆதரவாக இருப்பதையே வெளிக்காட்டுகின்றன. ஜெய்ஷ் இ முகமத் தீவிரவாத இயக்கத்தின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகிவரும் நிலையில், ராணுவத்தின் கடுமையான நடவடிக்கைகளை மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.