who is going to be the third person with csk in coming year ipl season 11
இந்தியன் பிரீமியர் லீக் சீசன்-11 இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த சீஸனில், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும்தான்! காரணம் இந்த அணிகள் ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த வருடம் களம் இறங்குகின்றன.
ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கின சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள். இதை அடுத்து இந்த இரு அணிகளும் தடை செய்யப்பட்டன. இதனால், இந்த அணியில் உள்ள வீரர்கள் மற்ற அணிகளில் விளையாடினர். தற்போது, இந்த அணிகளுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் தடை நீங்கிய நிலையில் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ல ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் களம் காண்கின்றன.
இந்நிலையில் இன்று கூடிய ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு இரு அணிகளும் 2015ஆம் ஆண்டு தங்கள் அணியில் இருந்த வீரர்கள் சிலரை தக்கவைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஐபிஎல் 11ஆவது சீசனுக்காக நடைபெறும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களின் பழைய வீரர்களில் மூவரை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களின் பழைய வீரர்களில் 3 பேரை தக்க வைத்துக் கொள்ளலாம். மீதமுள்ளவர்கள் ஏலத்தில் எடுக்கப் படுவார்கள். அவ்வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனியை தக்க வைத்துக் கொள்வதாக ஏற்கெனவே அறிவித்தது சென்னை அணி நிர்வாகம். இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவையும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொள்வதாகக் கூறியுள்ளது சென்னை அணி. எனவே, அந்த மூன்றாவது வீரர் யார் என்ற கேள்வி சென்னை அணி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஆனால், மூன்றாவது வீரர் குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லையாம். அநேகமாக அது ரவீந்த்ர ஜடேஜா அல்லது சென்னைப் பையன் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரில் ஒருவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அனேகமாக அஸ்வினை விட்டுக்கொடுக்க நிர்வாகம் முன்வராது என்று கூறப்படுகிறது.
