யார் இந்த நீதிபதி தல்வீர் பண்டாரி? இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து வாக்கு!
இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி வாக்களித்துள்ளார்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. இதனிடையே, பாலஸ்தீனத்தின் ரஃபா மீதான ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. அதனை நிறுத்துமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில், ரஃபா மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை ஆதரித்த நீதிபதிகளில் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தின் இந்திய பிரதிநிதியான நீதிபதி தல்வீர் பண்டாரி.
புகழ்பெற்ற நீதியரசரான தல்வீர் பண்டாரி, 2012 ஆம் ஆண்டு முதல் சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். 1947ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்த அவர், 2014 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் பல முக்கிய வழக்குகளை வாதிட்டுள்ள தல்வீர் பண்டாரி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக 2005ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதியன்று பதவி உயர்வு பெற்றார். பொது நல வழக்குகள், அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் சட்டம், சிவில் நடைமுறை, நிர்வாகச் சட்டம், நடுவர் மன்றம், குடும்பச் சட்டம், தொழிலாளர் மற்றும் தொழில்துறை சட்டம், மற்றும் பெருநிறுவன சட்டம் உள்ளிட்டவற்றில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் பிரதிநிதியாக 2012ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது முதல், அனைத்து வழக்குகளிலும் பங்களித்துள்ளார். கடல் தகராறுகள், அண்டார்டிகாவில் திமிங்கலங்கள், இனப்படுகொலை, கான்டினென்டல் ஷெல்ஃப் எல்லை நிர்ணயம், அணு ஆயுதக் குறைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் இறையாண்மை உரிமை மீறல் போன்ற குறிப்பிடத்தக்க பிரச்சினைகளில் பங்களித்துள்ளார்.
ஜப்பானியர்கள் 100 வயசையும் தாண்டி வாழ்வதற்கான ரகசியம் இதுதாங்க..!!
நீதிபதி பண்டாரி பல ஆண்டுகளாக சர்வதேச சட்ட சங்கத்தின் டெல்லி மையத்தின் தலைவராக இருந்துள்ளார். உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு, மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். விவாகரத்து வழக்கில் அவரது குறிப்பிடத்தக்க தீர்ப்பு, இந்து திருமணச் சட்டம், 1955ஐ திருத்துவது குறித்து மத்திய அரசை தீவிரமாகப் பரிசீலிக்கத் தூண்டியது. சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் 1971 இல் முதுகலைப் பட்டம் பெற்றார். 150 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட அந்த பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் புகழ்பெற்ற 15 முன்னாள் மாணவர்களில் ஒருவராக அப்பல்கலைக்கழகத்தாலேயே அவர் கௌரவிக்கப்பட்டார்.
இனப்படுகொலைக்கு சமமான செயல்களில் ஈடுபடுவதாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டி தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில், ரஃபாவில் உள்ள பாலஸ்தீனிய மக்களை அழித்தொழிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நவாஃப் சலாம் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை 13 பேர் ஆதரித்தனர்; 2 பேர் ஏற்கவில்லை. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை, உகாண்டாவைச் சேர்ந்த நீதிபதி ஜூலியா செபுடிண்டே மற்றும் இஸ்ரேலிய உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஹரோன் பராக் ஆகியோர் மட்டும் எதிர்த்தனர்.
இதனால், 13-2 என்ற வாக்குகளால் இந்த தீர்ப்பு ஏற்கப்பட்டது. இஸ்ரேல் தடையின்றி மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஐ.நா அமைப்புகளை அணுக வேண்டியதன் அவசியத்தையும் இந்த தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது.