Asianet News TamilAsianet News Tamil

சபாநாயகர் பதவி: சந்திரபாபு நாயுடுவுக்கு செக் வைக்கும் பாஜக - யார் இந்த புரந்தேஸ்வரி?

மக்களவை சபாநாயகர் பதவியில் சந்திரபாபு நாயுடுவுக்கு செக் வைக்கும் வகையில் பாஜக காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Who is Daggubati Purandeswari Andhra Pradesh BJP president likely to become loksabha speaker  smp
Author
First Published Jun 11, 2024, 11:40 AM IST

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகியுள்ளார். அவருடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், மத்தியில் கூட்டணி ஆட்சியே அமைந்துள்ளது. எனவே, கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு மத்திய அமைச்சர் பதவியை ஏற்கனவே பாஜக வழங்கியுள்ளது.

அதுதவிர, மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடும் போட்டி நிலவி வருகிறது. சபாநாயகர் பதவி தங்களுக்கே வேண்டும் என்று கேட்டு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், ஆட்சி கவிழ்ப்புகள், கட்சியில் பிளவு ஏற்படுத்துவது என பாஜகவின் கடந்த கால அரசியல் சித்து விளையாட்டுகளை கருத்தில் கொண்டு சபாநாயகர் பதவியை கேட்டு பெற அவர்கள் இருவரும் முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், சபாநாயகர் பதவியை அவர்களுக்கு தர பாஜக விரும்பவில்லை என தெரிகிறது.

இந்த பின்னணியில், சந்திரபாபு நாயுடுவுக்கு செக் வைக்கும் வகையில் அவரது மைத்துனியும், ஆந்திர மாநில பாஜக தலைவருமான புரந்தேஸ்வரியை சபாநாயகராக பாஜக திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதனால், ஏற்கனவே விரிசலில் இருக்கும் அவர்கள் இருவரது உறவில் மேலும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், நடுகரும், மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் மகள்தான் புரந்தேஸ்வரி (65). இவரது சகோதரி புவனேஸ்வரியை தான் சந்திரபாபு நாயுடு திருமணம் முடித்துள்ளார். ஆனால், 1995இல் அப்போதைய தெலுங்கு தேசம் தலைவரான என்.டி.ராமாராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சந்திரபாபு கட்சியை கைப்பற்றியதுடன், ஆட்சியையும் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக, தனது தந்தை என்.டி.ராமராவின் வீழ்ச்சிக்கு காரணமானவர் என்று கூறி சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து புரந்தேஸ்வரி எப்போதுமே விலகியே இருந்து வருகிறார்.

ஆனால், நடந்து முடிந்த ஆந்திர மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து, புரந்தேஸ்வரியின் ஆதரவிற்கு சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்திலும், மாநிலத் தேர்தலில் புரந்தேஸ்வரியின் பங்கை ஒப்புக் கொண்டு அவருக்கு சந்திரபாபு நாயுடு மீண்டும் நன்றி தெரிவித்தார்.

மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு? சபாநாயகர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

“அரசியல் பிரச்சினைகள் வேறு; குடும்பம் என்பது வேறு. அவர்களுக்குள் வலுவான குடும்ப உறவுகள் உள்ளன. புரந்தேஸ்வரி சந்திரபாபுவின் மைத்துனி. அவரது சகோதரர் பாலகிருஷ்ணா இந்துப்பூரில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். நாயுடுவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் உள்ளார். அவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைகிறார்கள்.” என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆந்திர பாஜக இணை பொறுப்பாளர் சுனில் தியோதர் கூறுகையில், தேர்தலில் கூட்டணி வெற்றி பெற, பாஜகவும் புரந்தேஸ்வரியும் உதவினர். சந்திரபாபு நாயுடு அதை சரியாக ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

புரந்தேஸ்வரியின் கணவர் டக்குபதி வெங்கடேஸ்வர ராவ், 5 முறை தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தவர், 1995 ஆட்சிக் கவிழ்ப்பில் சந்திரபாபு நாயுடுவின் அவர் பக்கம் நின்றார். ஆனால், புரந்தேஸ்வரி தனியாக விலகி விட்டார். அந்த சமயத்தில்  என்டிஆர் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டது. என்டிஆரின் பெரும்பாலான மகன்கள் மற்றும் மகள்கள் சந்திரபாபு நாயுடுவின் பக்கம் நின்றாலும், அவரிடம் நெருக்கம் காட்டாமல் விலகியே இருந்தனர்.

இதையடுத்து, கடந்த 2000ஆம் ஆண்டில் காங்கிரஸில் இணைந்த புரந்தேஸ்வரி, மாநில அரசியலை தவிர்த்து வந்தார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. 2004, 2009 தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று எம்.பி.யான புரந்தேஸ்வரி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றார். தொடர்ந்து டெல்லியிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிட்ட அவர், 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ராஜாம்பேட்டை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த புரந்தேஸ்வரி, இந்த முறை. ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவும், புரந்தேஸ்வரியும் பல ஆண்டுகளாக இடைவெளியை பேணி வருகிறார்கள். குடும்ப விழாக்களில் கூட, அவர்கள் இருவரும் வெவ்வேறு நேரங்களில் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆந்திர பாஜக தலைவராக புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்த தேர்தலில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி வைத்தாலும், அவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்களில் மட்டுமே ஒன்றாகக் காணப்பட்டனர். பாஜகவுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் முயன்ற போது ஒதுங்கியே இருந்த புரந்தேஸ்வரி, சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டபோது மட்டும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் 8 சட்டமன்ற மற்றும் மூன்று மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், மாநில அரசியலில் புரந்தேஸ்வரி தலையிடுவதை சந்திரபாபு நாயுடு விரும்பவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. என்டிஆர் மகள் ஆந்திராவில் பாஜகவுக்குத் தலைமை தாங்குவதும், அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு மாநிலத்தின் முதல்வராக இருப்பதும், ஒரு அரசியல்வாதியாக பவன் கல்யாண் எழுச்சி பெறுவதும் ஆந்திர அரசியல் சக்திவாய்ந்ததாக மாற்றியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios